< Back
மாநில செய்திகள்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் 8 மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் 8 மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள்

தினத்தந்தி
|
31 Dec 2022 8:19 PM GMT

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் 8 மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள்

தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சியால் 8 மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பசுமையான இயற்கை சூழலை ஏற்படுத்தும் வகையிலும், வனப்பரப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வீட்டுக்கு ஒரு விருட்சம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் செந்தமிழ்நகர் அமைத்து வருகிறார். அதன்படி அடிப்படை வசதிகள் இல்லாத மக்களை கண்டறிந்த அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதுடன் செந்தமிழ் நகர் என்ற பெயருடன் திறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.

இதே போல் அதிக அளவில் மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்து வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான பசுமையான சூழலை ஏற்படுத்தும் வகையிலும், வனப்பரப்பை அதிகரிக்க செய்யும் நோக்கத்திலும் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி உலக புவி தினத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தொடங்கி வைத்தார்.

8 மாதத்திலேயே 1 லட்சம் மரக்கன்றுகள்

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1 ஆண்டுக்குள் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கின. ஒரு ஆண்டு என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 8 மாதத்திலேயே 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், ஆஸ்பத்திரிகள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்றுப்படுகைகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

30-க்கும் மேற்பட்ட வகைகள்

இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசு துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் மா, பலா, புங்கை, நெல்லிக்கனி, வேம்பு, அரசமரம், ஆலமரம் என 30-க்கும் மேற்பட்ட வகையயான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

ஒரு லட்சமாவது மரக்கன்று

இந்த நிலையில் ஒரு லட்சமாவது மரக்கன்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நட்டார். பின்னர் அவர் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் தான் நட்டு வைத்த முதல் மரக்கன்று வளர்ச்சியினையும் பார்வையிட்டார்.

அப்போது கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், ரெட்கிராஸ் தலைவர் டாக்டர் வரதராஜன், துணைத்தலைவர் முத்துக்குமார், இந்திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவர் டாக்டர் சிங்காரவேலு, தஞ்சை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் சங்கநாராயணன், அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமார், கவின்மிகு தஞ்சை இயக்க செயலாளர் ராம்மனோகர், தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்