பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை
|தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகை கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் சில கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்றுடி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் புத்தாண்டை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும். புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழகத்தில் 90 ஆயிரம் போலீசாரும், 10 ஆயிரம் ஊர்க்காவல் படைவீரர்களும், ஆக மொத்தம் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வாகன சோதனை தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெறும். வாகனங்களில் நள்ளிரவு தேவை இன்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களில் கடற்கரை பகுதிகளில் குறிப்பாக கடல் நீரில் இறங்க கூடாது.
மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டக்கூடாது.
விபத்துகளை தவிர்த்து, உயிர்ச்சேதங்களை குறைக்கவுமே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீண்ட தூரம் வாகனங்களில் செல்வோர், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, தேநீர் அருந்தி செல்ல வேண்டும். அதற்காகத்தான் இரவு முழுவதும் நெடுஞ்சாலைகளில் ஓரமாக உள்ள கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வீடுகளை பூட்டிவிட்டு, வெளியூர் செல்பவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால், உங்கள் வீடு உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டுப்போவது தடுக்கப்படும்.
வழிபாட்டுத்தலங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அங்கு தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் போலீசாரின் அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மோட்டார் சைக்கிள் பந்தயம் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசுக்கு இது தொடர்பாக உரிய தகவல் கொடுக்க விரும்புபவர்கள், தொலைபேசி எண் 100-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தகவல் சொல்பவர்களின் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். மேலும் அவசர உதவி தேவைப்படுபவர்கள், காவல் உதவி செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அசம்பாவிதம் இல்லாத, விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாட பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பு நல்கவும் வேண்டுகோள் வைக்கிறோம்.
இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.