திருச்சி
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது -மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
|கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
ரோஜ்கர் மேளா
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 7-வது பணி நியமன ஆணை வழங்கும் விழா நாடு முழுவதும் 44 இடங்களில் நடைபெற்றது. இதில் 70 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு அலுவலகங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சுங்கத்துறை, வங்கிகள் உள்பட பல்வேறு துறைகளில் 109 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு சுங்கத்துறை தலைமை ஆணையர் உதய்சங்கர் தலைமை தாங்கினார். சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.எம்.ரவிச்சந்திரன், சுங்கம் மற்றும் சேவைவரி ஆணையர் ஆனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டல மேலாளர் காமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி நியமன ஆணை
விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் 61 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:- மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு 9 ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம். கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகையால்தான் நமது நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் நாம் 5-வது இடத்தில் உள்ளோம். கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேருபவர்களுக்கு கர்மயோகி பரம் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் பயிற்சி வழங்கப்படுகிறது.
பிரதமர் நேரடியாக பொதுமக்களுக்கு திட்டத்தை கொண்டு செல்கிறார். தேவையான சட்டங்கள் இயற்றி, வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தேவையற்ற சட்டங்களை நீக்கி, அவர் வெளிப்படையான ஆட்சி நடத்தி வருகிறார். சேவை செய்ய வேண்டும், நல்ல அரசாக செயல்பட வேண்டும். ஏழை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
95 சதவீதம் தமிழர்கள்
நிகழ்ச்சியை தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறும் போது, ஒரே ஆண்டில் ரோஜ்கர் மேளா மூலம் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன்படி, கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு பணி வழங்கியுள்ளோம். மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும். இதன் மூலம், "சொன்னதை செய்பவர் பிரதமர்" என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். தமிழகத்தில் மத்திய அரசு பணியிடங்களில் 95 சதவீதம் தமிழர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள், என்றார்.
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.