கடலூர்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.1¼ லட்சம் நகைகள் திருட்டு
|கடலூரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நள்ளிரவில் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
கடலூர்
தனியார் நிறுவன ஊழியர்
கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் பதறிய சரவணன், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து சரவணன், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ரூ.1¼ லட்சம்
விசாரணையில் சரவணன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து, அதில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.