சிவகங்கை
பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.1¼ லட்சம் மோசடி- கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
|பணத்தை இரட்டிப் பாக்கி தருவதாக கூறி ரூ.1¼ லட்சம் மோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி
காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 41). கடந்த மே மாதம் இவர் டெலிகிராம் செயலி பார்த்தபோது அதில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்த முத்து 9 தவணைகளில் தன்னிடம் இருந்த ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், சக்கரதாரா, சீனிவாசா, சோமசேகர், வசந்தகுமார், பனேந்திரா, ஆகியோரின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட 6 பேரும் அதன் பின்னர் அவருடைய தொடர்பை துண்டித்து விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு வழக்கு
இதேபோல தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் ராகுல் (20). இவர் கடந்த மே மாதம் டெலிகிராம் செயலில் வெளியான ஆன்லைனில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட 6 பேர்களிடம் 5 தவணைகளில் ரூ.23 ஆயிரத்து 850 பணம் செலுத்தி உள்ளார்.
இவரையும் அந்த கும்பல் ஏமாற்றி விட்டார்களாம். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த 2 வழக்குகளிலும் தொடர்புடைய 6 பேரையும் மற்றொரு வழக்கில் பெங்களூரு நகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.