கடலூர்
கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
|கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில்,
கர்நாடாகவில் பெய்த பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கிடு, கிடுவென உயர்ந்து நிரம்பியதையடுத்து அதில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. அந்த நீர் கல்லணை வழியாக கீழணைக்கு சீறிபாய்ந்து வந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி நிலவரப்படி கீழணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் மெல்ல மெல்ல உயர்ந்து நேற்று காலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் கீழணை சில மணி நேரங்களிலேயே முழு கொள்ளளவை எட்டியது.
உபரி நீர் வெளியேற்றம்
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரை சேமித்து வைக்க தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தபணி முழுமையாக இன்னும் முடியவில்லை. இதனால் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் அதிகஅளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் தலைமையில் வருவாய்த்துறையினர் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களான ஜெயங்கொண்டபட்டினம், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், காட்டுக்கூடலூர், பழையநல்லூர், சாலியந்தோப்பு, வையூர், அகரநல்லூர், ஏருக்கன்காட்டு படுகை, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அங்கிருந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
ஆற்றில் குளிக்கக்கூடாது
அப்போது அதிக அளவு தண்ணீர் வருவதால், ஆற்றில் பொது மக்கள் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.அப்போது சிதம்பரம் வருவாய் ஆய்வாளர் ராஜா, திருவக்குளம் வருவாய் ஆய்வாளர் தையல்நாயகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வீராணம் ஏரிக்கு தண்ணிர் திறப்பு
மேலும் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 2.100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் தற்போது 42.90 அடியாக உள்ள ஏரியின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை விரைவில் எட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.