சேலம்
மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
|மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேட்டூர்:-
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பலத்த மழை
தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து நேற்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இரவில் இந்த நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதில் வினாடிக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வெள்ள அபாயம்
அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 120.12 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை சார்பில் விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடயே நேற்று ஆடிப்பெருக்கையொட்டி புனித நீராட பக்தர்கள் அதிகளவில் மேட்டூருக்கு வந்தனர். மேலும் காவிரி ஆற்றில் பலத்த ஓசையுடன் தண்ணீர் பீறிட்டு வெளியேறுவதால் இந்த அழகை கண்டு ரசிக்க மேட்டூருக்கு சுற்றுலா பயணிகளும் நேற்று அதிகளவில் வந்தனர்.
சுற்றுலா பயணிகள் 16 கண் பாலத்தில் தண்ணீர் வெளியேறும் காட்சியை கண்டுகளிக்க மேட்டூர்-சேலம் நெடுஞ்சாலை ஓரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதுப் பாலத்தில் நின்று தண்ணீர் கரைபுரண்டு ெசல்லும் அழகை ரசித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் இந்த புது பாலத்தின் வழியாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் இந்த சாலை முழுவதும் மிகுந்த போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் ஆனது.
16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மேட்டூர் அனல் நிலையம் அருகே சென்று மீண்டும் காவிரி ஆற்றுடன் இணைகிறது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
மின் உற்பத்தி பாதிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, உள்பட 7 இடங்களில் கதவணை மின் நிலையங்கள் உள்ளன. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேறுவதால் இந்த மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இந்த மின் நிலையங்களில் நடைபெற்று வந்த மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.