விழுப்புரம்
1 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தொற்றா நோய்க்கான சிகிச்சை
|விழுப்புரம் மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 42 ஆயிரத்து 373 பேருக்கு தொற்றாநோய்க்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
விழுப்புரம், செப்.21-
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'மக்களை தேடி மருத்துவம்" திட்டம்
தமிழக அரசின் சுகாதாரத்துறையின் சார்பில் "மக்களைத்தேடி மருத்துவம்" என்ற திட்டத்தின் மூலம் தொற்றாநோயுடைய பொதுமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருந்துகள், மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட துணை சுகாதார நிலையங்களுக்கு 343 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 129 துணை சுகாதார செவிலியர்கள், 64 சுகாதார ஆய்வாளர்கள், 13 பிசியோதெரபிஸ்ட், நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர் ஆகியோர் உள்ளனர். இதில் பெண் தன்னார்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள தொற்றா நோயுடைய மக்களை வீடு தேடிச்சென்று அவர்களுக்கு முறையாக பரிசோதனை செய்து 2 மாத காலத்திற்கு மருந்துகள், மாத்திரைகள் வழங்குவர். 3-வது மாதம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து பரிசோதனை செய்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்துவர். நாள்பட்ட நோயுடைய வயோதியர்கள் மற்றும் படுக்கை நிலையில் உள்ள நாள்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை செவிலியர், வீட்டிற்கே சென்று மருத்துவ உதவி வழங்குவர். இத்திட்டத்திற்காக வட்டாரத்திற்கு ஒரு தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
1 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு...
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சீரான முறையில் மக்களை நேரடியாக வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்யப்பட்டு மக்களே அறியாமல் இருக்கும் தொற்றா நோயினை கண்டறிந்து மிகச்சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த சிகிச்சைக்கான மருந்துகள் எவ்வித தட்டுப்பாடுகளுமின்றி போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. தொற்றா நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பின்னாளில் ஏற்படும் விளைவுகளை தவிர்த்து அவர்களின் உணவு மாற்ற முறை, வாழ்வியல் மாற்ற முறைகளை மிக எளிய முறையில் விளக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 373 பேர் தொற்றா நோய்க்கான மருந்து, மாத்திரைகளை பெற்று பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் சிரமம் இருப்பின் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரை- 04146 - 223612 மற்றும் சுகாதார ஆய்வாளரை 9677428352 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.