கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்
|மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
முதல்-அமைச்சர், பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் வகையில் மக்களைத்தேடி மருத்துவம் என்ற ஒரு முன்னோடி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 வயதுக்குமேல் உள்ள சர்க்கரை வியாதி, உயர் ரத்த கொதிப்பு நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று பெண் சுகாதார தன்னார்வளர்கள் மூலமாக 2 மாதத்திற்கு தேவையான மருந்துப் பெட்டகத்தினை வழங்கி வருகின்றனர். மேலும் வட்டாரத்தில் உள்ள பக்கவாதம், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் கை, கால் செயலிழந்து கிசிச்சை தேவைப்படும் நபர்களின் வீட்டுக்கு சென்று உரிய சிகிச்சையினை மருத்துவக்குழுவினர் அளித்து வருகின்றனர். மக்களைத்தேடி மருத்துவம் சிறப்பு வாகனம் மூலமாக வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சைபெறும் நபர்களுக்கு தேவைப்படும் பெரிடோனியல் டையாலிஸ் திரவ பாக்கெட்டுக்களை வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட 36,192 பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட 44,310 பேர், சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 22,736 பேர், வலி நிவாரண சிகிச்சை பெற்றும் வரும் 2,552 பேர், இயன்முறை சிகிச்சை பெற்று வரும் 5,954 பேர், பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 749 பேர் பயனடைந்து வருகின்றனர். எனவே இந்த மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.