சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம், நவரத்தின கற்கள் பறிமுதல்
|சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், 1,706 கேரட் விலை உயர்ந்த நவரத்தின கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (வயது 30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள்
அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. மேலும் 2 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கமும், ரூ.4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நவ ரத்தின கற்கள்
அதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த தங்கராஜா (37) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் அவரது உடைமைகளில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவரது உள்ளாடைக்குள் விலை உயர்ந்த நவரத்தின கற்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1,706.05 கேரட் நவரத்தின கற்களை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், 1,706 கேரட் விலை உயர்ந்த நவரத்தின கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்தவர் உள்பட 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.