சேலம்
தீபாவளியை முன்னிட்டு ரூ.1 கோடி விற்பனை இலக்கு
|சேலம் அண்ணா பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம் அண்ணா பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
தள்ளுபடி விற்பனை
சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் அண்ணா பட்டு மாளிகை காதி கிராப்ட் அலுவலகத்தில், காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அலுவலக பொறுப்பாளர் வசந்தா தலைமை தாங்கினார். கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள துணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு கதர், பட்டு, பாலிஸ்டர், ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் கதர் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.85 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடன் வசதி
இந்த ஆண்டு தீபாவளியைமுன்னிட்டு ரூ.1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கதர் ஆடைகள் வாங்க வசதியாக தவணை முறையில் கடன் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக உலர் பழங்கள், நெல்லி, பேரீட்சை, அத்திப்பழம் ஆகியவைகளை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தள்ளுபடி மற்றும் ஜி.எஸ்.டி. வரி விலக்கை பயன்படுத்தி அதிக அளவு கதர் துணிகள் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, கவுன்சிலர் கிரிஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.