< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
18 Oct 2022 2:04 PM IST

சென்னை விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 290 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்க சங்கிலி, தங்க தகடு ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 507 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் விமான நிலைய சுங்க பகுதி வளாக கழிவறையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு மர்ம பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன.

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து அதனை விமான நிலைய கழிவறையில் வைத்து விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ 290 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 797 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்