சென்னை
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
|துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 730 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு விமான ஊழியர்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை கண்ட ஊழியர்கள், விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து விமான நிலைய ஆணையக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் ஏறி தண்ணீர் தொட்டியில் இருந்த பார்சலை வெளியே எடுத்தனா். பின்னர் 'மெட்டல் டிடெக்டர்' மூலம் பரிசோதித்ததில் அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.
பின்னர் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 730 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபாயில் இருந்து சென்னைக்கு தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதனை விமான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு தப்பி ஓடியவர் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.