< Back
மாநில செய்திகள்
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்க கட்டிகள்
சென்னை
மாநில செய்திகள்

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி தங்க கட்டிகள்

தினத்தந்தி
|
25 Oct 2023 5:52 PM IST

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் கிடந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் பார்சல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து, அந்த பார்சலை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்தனர். அப்போது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. பின்னர் பார்சலை வெளியில் எடுத்து பிரித்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பார்சலில் சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அபுதாபியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமி தங்கத்தை விமானத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு கீழே இறங்கி வெளியில் சென்றுவிட்டார். அதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமி விமானத்தில் ஐதராபாத் செல்வதற்கு உள்நாட்டு விமான டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணித்து தங்க கட்டியை எடுத்துவிட்டு வெளியில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

கடத்தல் கும்பலை சேர்ந்த ஆசாமிகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்