< Back
மாநில செய்திகள்
இ-சேவை மையம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி
மாநில செய்திகள்

இ-சேவை மையம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி

தினத்தந்தி
|
28 Sept 2023 5:12 AM IST

அரசு வேலை, கடனுதவி வழங்குவதாக கூறி இ-சேவை மையம் நடத்தி ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த தம்பதி மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவர் கடந்த 5 வருடங்களாக கே.வி.குப்பத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கே.வி.குப்பம், குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் மற்றும் கோர்ட்டில் அலுவலக பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்த வேலைகளை வாங்கித்தருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் வீடு கட்ட கடனுதவி, மத்திய அரசின் பிரதம மந்திரி யோஜனா உள்ளிட்ட அரசின் திட்டங்களில் கடனுதவியும் பெற்றுத்தருவதாக கூறினர். அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

போலி பணி நியமன ஆணை

இதை நம்பி நாங்கள் பணம் வழங்கினோம். எங்கள் அனைவரிடமும் அவர் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ளார். ஆனால் எங்களுக்கு அரசு வேலை மற்றும் கடன் வாங்கித்தரவில்லை. கே.வி.குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கு வங்கியில் கடன் பெற்றதற்கான போலியான காசோலையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அளித்துள்ளார். பலருக்கு போலி பணி நியமன ஆணைகளையும் வழங்கி உள்ளார்.

இந்த மோசடிகளுக்கு அவர்கள் இ-சேவை மையத்தை பயன்படுத்தி உள்ளனர்.

அந்த நபர் வழங்கியது போலி பணி நியமன ஆணை என்பது குறித்து தெரிந்த பின்னர், நாங்கள் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம், நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்