விருதுநகர்
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு ஒப்புதல்
|சிவகாசி யூனியன் கூட்டத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி யூனியன் கூட்டத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
யூனியன் கூட்டம்
சிவகாசி யூனியன் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அதிகாரிகள் புகழேந்தி, தேவஆசிர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். இதில் மாரனேரியில் குளியல்தொட்டி, பூலாவூரணியில் ஆழ்துளை கிணறு, நிறைமதியில் பல்நோக்கு கட்டிடம், சித்துராஜபுரத்தில் தார்ச்சாலை, எரிச்சநத்தத்தில் தார்ச்சாலை, பயணியர் நிழற்குடை உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது.
தண்ணீர் வினியோகம்
கவுன்சிலர் கலைமணி:- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவிப்பது இல்லை.
ஜி.பி.முருகன்: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பள்ளியில் சமையல் கூடம் கட்டுமான பணி தரம் இல்லாமல் கட்டப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
சுடர்வள்ளி சசிக்குமார்: பள்ளப்பட்டி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்.
சண்முகத்தாய்: செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தரம் இல்லாமல் இருக்கிறது.
மின்விளக்கு வசதி
ஜெகத்சிங்பிரபு: சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் கண்மாயையொட்டி உள்ள ரோட்டில் 4 இடங்களில் பெரிய பள்ளம் உள்ளது.
அன்பரசு: மீனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் நீர் வரத்து கால்வாய் உள்ளது. எனவே அந்த பகுதியில் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.
சின்னதம்பி: சிவகாமிபுரம் காலனி, முருகன்காலனி, விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். அந்த பகுதியில் புதிய மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.