திருச்சி
திருச்சி அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா
|கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி பேசினார்.
கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்று திருச்சி அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி பேசினார்.
பட்டமளிப்பு விழா
திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் 2017-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து பயிற்சி மருத்துவர் பணியை 147 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு முடித்து இருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு விழா மருத்துவ கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் டி.நேரு தலைமை தாங்கினார். சென்னை கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 147 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறந்த மருத்துவ சேவை
இன்று மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்களாக பட்டம் பெறும் தாங்கள் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை செய்வதை முதன்மை நோக்கமாக கொள்ளவேண்டும். மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி அவர்கள் பிரச்சினைகளை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்கும் மனபக்குவத்தை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவத்துறையில் வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கண்கானித்து அவற்றில் தேர்ந்தவர்களாக உருவாக வேண்டும். வருங்காலத்தில் முதுகலை மருத்துவம் பயின்று மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் பேராசிரியர்கள் டாக்டர் சதீஸ்குமார், டாக்டர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக துணை முதல்வர் அர்ஷியா பேகம் வரவேற்றார். முடிவில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் நன்றி கூறினார். விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் அவர்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் என்று திரளாக கலந்து கொண்டனர்.