காஞ்சிபுரம்
படப்பை அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் 6 வழிச்சாலை
|A bumpy 6 lane road near Padappai
போக்குவரத்து நெரிசல்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் 6 வழி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக காஞ்சீபுரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள், அரசு பஸ்கள், செல்லும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க படப்பை பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் மேம்பாலம் அமைக்கும் பகுதியில் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியான 6 வழி சாலை செல்லும் படப்பை பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குண்டும் குழியுமான சாலை
இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். படப்பை பகுதியில் 6 வழிச்சாலையில் குண்டும் குழியுமாக பள்ளம் உள்ளது. குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ள இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடனும் உயிருக்கு பயந்து வாகனத்தை ஓட்டும் நிலையில் செல்கின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தவறி விழுந்தும் செல்கின்றனர். சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு பலகையில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை
இதனால் இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய படப்பை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக கிணறு போல் மோசமாக உள்ளது. சாலையில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ள பள்ளத்தை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைத்தால் வரும் காலங்களில் ஏற்படும் பெரும் விபத்தினை தவிர்க்கலாம். எனவே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.