நாமக்கல்
வீடுகளில் தூங்கிய பெண்களிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
|4½ pound gold chain stolen from women who slept in houses
நாமக்கல்லில் வெவ்வேறு வீடுகளில் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தூங்கி கொண்டு இருந்த பெண்களிடம் 4½ பவுன் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கச்சங்கிலி பறிப்பு
நாமக்கல் போதுப்பட்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். ரிக்வண்டி தொழிலாளி. இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நவீனா (26) குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு நவீனா குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே புகுந்த 2 பேர், நவீனா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து உள்ளனர். சுதாரித்து கொண்ட நவீனா தாலியை பிடித்து கொண்டார். இருப்பினும் தங்கச்சங்கிலி கொள்ளையர்கள் கையில் சிக்கி கொண்டது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
முகமூடி கொள்ளையர்கள்
இதேபோல் போதுப்பட்டி சரவணா நகரை சேர்ந்தவர் அருண்குமார். முட்டை வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (32). இவர்கள் தங்களது 3 குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து தனித்தனியே நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு கொள்ளை சம்பவத்திலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் முகமூடி அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
ஒரேநாள் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த 2 பெண்களிடம் கதவை உடைத்து 4½ பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட துணிகர சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.