டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
|மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டு உள்ளது.
எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த நான்கு நாள் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
மழை நீடித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்போது, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
எனவே ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணத்தை இந்த அரசு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.