< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?

தினத்தந்தி
|
15 Nov 2022 8:28 PM GMT

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரோனாவால் பறிப்பு

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண்களுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.

மறு பரிசீலனை

பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கருத்து வருமாறு:-

அருப்புக்கோட்டை தமிழ்ச்செல்வன்:-

ெரயில் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த முதியோருக்கான கட்டண சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ெரயிலில் பயணம் செய்யும் அனைத்து முதியோர்களையும் மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. முதியவர்கள் தங்களது கடைசி காலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இந்த சலுகை கட்டணத்தை பயன்படுத்தி சென்று வந்தனர். தற்போது ரத்து செய்யப்பட்டது முதியவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை மத்திய ெரயில்வே அமைச்சகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பள்ளப்பட்டி ஜெயராஜ்:- ரெயில் பயணத்தின் போது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையின் மூலம் எண்ணற்ற பேர் பயன்பெற்றனர். இந்தநிலையில் இந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதை பயன்படுத்தி வந்த மூத்தகுடிமக்கள் தற்போது பரிதவிக்கிறார்கள். ஏற்கனவே ஓய்வுக்கு பின்னர் போதிய வருமானம் இல்லாமல் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை ரெயில்வே நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும்.

மீண்டும் சலுகை

காரியாபட்டி நடராஜன்:-

நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் அடிக்கடி எனது சொந்த ஊர் செல்வதற்காக ெரயிலை பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளை பயன்படுத்தி வந்தேன். ஆனால் தற்போது சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய சலுகைகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூமாப்பட்டி சம்சுதீன்:-

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை தற்போது ரெயில்வே நிர்வாகம் நிறுத்தி விட்டது. இதனால் எங்களது உரிமைகள் பறிக்கப்பட்டதாக நினைக்கிறோம். எங்களை போன்ற வயதானவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையை மீண்டும் ெரயில்வேயில் கொண்டு வர வேண்டும். அதற்கு உண்டான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

நஷ்டத்திற்கு வாய்ப்பு இல்லை

விருதுநகர் அழகு சுந்தரம்:- கொரோனா பாதிப்புக்கு பின்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து ெரயில்களும் இயக்கப்படும் நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான மூத்த குடிமக்கள் வழக்கமாக புண்ணிய தலங்களுக்கு ெரயில்களில் சென்று வருவது வழக்கம். கட்டண சலுகையில் சென்று வந்த நாங்கள் தற்போது சலுகை இல்லாத நிலையில் தல யாத்திரையை தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெளியூர் செல்ல வேண்டும் என்றால் ெரயில் பயணத்தை நம்பி உள்ள நாங்கள் கட்டணச்சலுகை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே மத்திய அரசு ெரயில்களில் மூத்த குடிமக்களுக்கானகட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டியது அவசியமாகும். அனைத்து ெரயில்களும் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்படும் நிலையில் கட்டண சலுகை வழங்குவதால் ெரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பச்சை கொடி காட்டுமா?

தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

மேலும் செய்திகள்