< Back
மாநில செய்திகள்
புனரமைக்கப்படுமா? சேந்தமங்கலம் புதன்சந்தை
நாமக்கல்
மாநில செய்திகள்

புனரமைக்கப்படுமா? சேந்தமங்கலம் புதன்சந்தை

தினத்தந்தி
|
15 Nov 2022 7:30 PM GMT

Will it be rebuilt? Senthamangalam Wednesday Market

சேந்தமங்கலம்:-

ஒவ்வொரு வாரமும் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் சேந்தமங்கலம் புதன் சந்தை புனரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா? என்ற ஏக்கத்தில் வியாபாரிகள் உள்ளனர்.

புதன்சந்தை

கால்நடை சந்தை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தைதான். நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்த சந்தையானது சேந்தமங்கலத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சந்தை காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மதியம் 12 மணி வரையில் இந்த சந்தை கூடும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தரகு பிடிப்பவர்கள், விவசாயிகள் இங்கு கால்நடைகளை வாங்கவும், விற்பனை செய்யவும் வந்து செல்வர்.

ரூ.2 கோடி வர்த்தகம்

இந்த சந்தையில் சிந்து, சிந்து கிராஸ் மாடு, நாட்டு மாடு, நாட்டு மாடு கிராஸ், வடக்கத்திய மாடு, கிராஸ் பசு போன்ற பல்வேறு வகையான மாடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 100 கிலோ எடை கொண்ட நாட்டுமாடு ரூ.25 ஆயிரத்திற்கும், பால் கறக்கும் நாட்டு பசு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ.2 கோடி அளவில் இங்கு வர்த்தகம் நடைபெறும்.

இவ்வாறு கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இடமான இந்த புதன் சந்தையின் அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று கேட்டால் அடிப்படை வசதிகளா? அப்படி என்றால் என்ன என்று கேட்பது போல் உள்ளது.

சேறும், சகதியுமாக காட்சி

மழை காலங்களில் சந்தை வளாகத்திற்குள் நுழையவே முடியாதபடி ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. சந்தை பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் அங்கு வரும் கால்நடைகளுக்கு அது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.

எனவே சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காதவாறு சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். புதன்சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குப்பை கொட்டும் இடம்

இதுகுறித்து மாட்டு வியாபாரி ஈஸ்வரன் கூறியதாவது :-

புதன்சந்தை வளாகம் குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. ஏக்கர் கணக்கில் சந்தை பகுதி பரந்து விரிந்து காணப்படுவதால் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர சந்தைக்கு வருவோருக்கு எந்தவொரு வசதிகளும் இல்லை. சந்தை எல்லை பகுதி மிக குறுகலாக இருக்கிறது. அதை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு சில சந்தைகளில் அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன. வசூலிக்கப்படும் வரியும் மிக மிக குறைவாக உள்ளது.

இங்கு உள் கேட், வெளிகேட் என 2 இடங்களில் வரி வசூல் செய்யப்படுவது வியாபாரிகளுக்கு சுமையாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மாட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் சிலர் அதன் எலும்புகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை சந்தை வளாகத்துக்கு உள்ளேயே போட்டு செல்வதால் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றி திரிகின்றன. அந்த நாய்களால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

மின்னாம்பள்ளியை சேர்ந்த வருதராஜ்;- சந்தை வளாகத்தில் இயங்கி வந்த சிறுவர் பூங்கா தற்போது செயல்படாமல் இருந்து வருகிறது. அதை சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் சந்தை கூடும் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் சந்தை நுழைவாயில் அருகில் நடைபாதை கடைகள் அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. எனவே அந்த நடைபாதை கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அந்த மாட்டு சந்தையின் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுக்கு ஆய்வு அறிக்கை

சந்தையில் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதன் சந்தையில் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். ஊரக சந்தை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதன் சந்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அனுமதி கிடைத்த உடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் செய்திகள்