< Back
மாநில செய்திகள்
அடுத்தடுத்து 2 வீடுகளில் டவுசர் கொள்ளையர்கள் கைவரிசை; நகை-பணம் திருட்டு
அரியலூர்
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 வீடுகளில் டவுசர் கொள்ளையர்கள் கைவரிசை; நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

Dowser robbers gang up on 2 houses in succession; Jewel-money theft

நகை பறிப்பு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி நாட்டார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). இவரும், இவரது மகள் மற்றும் மருமகள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு சங்கர் வீட்டின் பின்பக்க கேட்டை உடைத்து உள்ளே புகுந்த 25 வயது மதிக்கத்தக்க 3 டவுசர் கொள்ளையர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரின் மகள் திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பற்றி இழுத்துள்ளனர். தூக்கத்தில் இருந்த திவ்யா சுதாரிப்பதற்குள் சங்கிலியை பறித்துக்கொண்டு திருடர்கள் தப்ப முயன்றனர். அப்போது விழித்துக் கொண்ட திவ்யா சத்தம் போடவே டவுசர் கொள்ளையர்கள் பின் பக்கம் காட்டுப் பகுதிக்கு தப்பி ஓடிவிட்டனர். திவ்யா மற்றும் அவரது தந்தை சங்கர் ஆகிய இருவரும் டவுசர் கொள்ளையர்களை பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

கத்திமுனையில்...

இதேபோல் சூரக்குழி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவரான சிங்காரவேலு வீட்டின் முன்பக்கம் கட்டிலிலும், அவரது மனைவி லெட்சுமி(32) மற்றும் குழந்தைகள் அனைவரும் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பின்பக்க கதவு தாழ்ப்பாளை கம்பியால் தூக்கிவிட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த அதே டவுசர் கொள்ளையர்கள் பீரோவை திறந்துள்ளனர். அப்போது லட்சுமி கண் விழித்துக்கொண்டு கணவர் தான் பீரோவை திறக்கிறார் போல என்று பீரோவை திறக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை காண்பித்து லட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றினை பறித்துள்ளனர். அவர் சத்தம் போடவே சத்தம் கேட்டு உள்ளே வந்த கணவர் சிங்காரவேலு கத்தியை காண்பித்ததும் பயந்து செய்வதறியாது நின்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கொள்ளையர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்