< Back
மாநில செய்திகள்
95 பணியிடங்கள்: குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது  டி.என்.பி.எஸ்.சி
மாநில செய்திகள்

95 பணியிடங்கள்: குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

தினத்தந்தி
|
28 March 2024 9:07 PM IST

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.

சென்னை,

துணை கலெக்டர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேரமுகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளுக்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வில் தேச்சி பெற்ற 2 ஆயிரத்து 113 பட்டதாரிகள் இந்த முதன்மைத் தேர்வை எழுதியதாக சொல்லப்பட்டது.

முதன்மைத் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி கடந்த 6-ந்தேதி வெளியிட்டது. அதில் வெற்றி பெற்ற 105 பெண் தேர்வர்கள் உள்ளிட்ட 198 பேரின் பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 26-ந்தேதி முதல் இன்று வரை சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது.

இந்த நிலையில் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 198 பேரில் 197 பேரின் மதிப்பெண்கள் அதில் இடம்பெற்று இருந்தன. இதில் 580 மதிப்பெண் பெற்ற ஆண் தேர்வர் முதல் இடத்தை பெற்றுள்ளார். அதற்கடுத்தபடியாக 579.75 மதிப்பெண், 574 மதிப்பெண்களுடன் பெண் தேர்வர்கள் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்