பெரம்பலூர்
ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
|ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைெபற்றது.
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்யக்கோரி ஜனாதிபதியை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர் சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ், தி.மு.க. நகர செயலாளர் பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கையெழுத்திட்டனர். அப்போது ஆ.ராசா பேசுகையில், தமிழ் மொழி, கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தை மீறி பேசி வரும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு தமிழகத்தில் காவி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கவர்னர் ரவியை தூக்கி எறிய வேண்டிய நாள் வெகுவிரைவிலேயே இல்லை என்றாலும் கூட 2024-ல் ஆட்சி மாறும். அப்போது பிரதமர் யார்? என்பதை தமிழகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். அப்படி பிரதமர் வந்த 2-வது நாள் தமிழக கவர்னர் மாளிகையில் வழியனுப்பும் விழா இருக்காது. தானாகவே கவர்னர் ரவியே ஓடி விடுவார். இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் தமிழக கவர்னரின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தெரியவரும், என்றார். முடிவில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் நன்றி கூறினார்.