தஞ்சாவூர்
சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்
|ஆணைக்காடு கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி:
ஆணைக்காடு கிராமத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
பேராவூரணி ஒன்றியம் காலகம் ஊராட்சி ஆணைக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த தெருவில் இருந்த மண் சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நவம்பர் மாதம் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
பணி பாதியில் நிறுத்தப்பட்டது
இதை முன்னிட்டு கிராவல் கொட்டப்பட்டதுடன் பணிகள் நடைபெறவில்லை. சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வரும் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களிலும், மழை காலங்களிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
விரைந்து முடிக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மயானத்திற்கு செல்லும் சாலையை புதிதாக அமைத்து மயானத்துக்கு சுற்றுப்புற சுவர் அமைக்க வேண்டும்.
சேதமடைந்துள்ள சமுதாய கூடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். சேதமடைந்த நீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிதிராவிடர் தெரு மக்கள் தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.