மதுரை
பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்களால் பரபரப்பு
|மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருந்து கடை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக 2 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மருந்து கடை அருகே பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக 2 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் அப்பகுதியில் இருந்து மாடக்குளம் செல்லும் சாலை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் அனந்தபத்மநாபன் சாப்பிட வீட்டிற்கு சென்றதால் அவரது மகன் ஜவகர் (வயது 40) கடையில் இருந்தார். அந்த நேரத்தில் 2 சிறுவர்கள் அந்த வழியாக வந்தனர். அவர்கள் திடீரென்று ஒரு பாட்டிலில் தீப்பற்ற வைத்து அதனை மருந்து கடை அருகே வீசி விட்டு தப்பி விட்டனர். அந்்த பாட்டில் உடைந்து தீப்பற்றியது.
அதை கண்ட ஜவகர், உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுப்பிரமணியபுரம் போலீசார் மற்றும் எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர். பாட்டில் சிதறல்களை சேகரித்தனர். பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசியது தெரியவந்தது.
2 சிறுவர்கள் யார்?
இது குறித்து கடை உரிமையாளரிடம் விசாரித்தபோது தங்களுக்கும், அவர்களுக்கும் எவ்வித தொடர்பும், பிரச்சினையும் இல்லை. அவர்கள் யார்? என்று எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
எனவே சிறுவர்கள் எதற்காக அந்த கடையின் அருகே பெட்ரோல் குண்டு வீசினார்கள், அவர்கள் யார்? என்பது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அதில் பதிவான காட்சிகளை கொண்டு பெட்ரோல் குண்டுவீச்சில் தொடர்புடைய 2 சிறுவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.