ராமநாதபுரம்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
|திருவாடானையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தொண்டி,
திருவாடானையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அய்யப்பன் கோவில் அருகில் தொடங்கிய பேரணியை தாசில்தார் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். இதில் வருவாய் துறையினர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வாக்காளர் தின விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.
தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ராமநாதபுரம் துணை ஆட்சியர் சிவசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதே போல் திருவாடானை தாலுகாவில் 71 வாக்குச்சாவடி மையங்களில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.