சென்னை
அயனாவரத்தில் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்தவர் தற்கொலை - மருத்துவ கவுன்சில் தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீத முடிவு
|இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததால் வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சென்னை அயனாவரம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மத்திய அரசில் ஜி.எஸ்.டி.பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி லட்சுமி. பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு தருண்குமார் (வயது 27), நவீன் குமார் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு். இதில் நவீன்குமார் ஜார்ஜியா நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வை கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுதி இருந்தார். அதில் தோல்வியடைந்த நிலையில், மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வருகிற டிசம்பர் 4-ந்தேதி நடக்கவிருக்கும் தகுதி தேர்வில் எப்படியாவது படித்து தேர்ச்சி பெற்றிட வேண்டும் என்ற முனைப்போடு வீட்டில் இருந்தபடியே படித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவரது பெற்றோர் ஜெயராஜ், லட்சுமி ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டனர். வீட்டில் நவீன்குமாரும், மனவளர்ச்சி குன்றிய அவரது அண்ணன் தருண்குமாரும் இருந்துள்ளனர். அப்போது மருத்துவ கவுன்சில் தேர்வில் ஏற்கனவே தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த நவீன்குமார். தேர்வில் மீண்டும் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து இரவு பெற்றோர் திரும்பி வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் நவீன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.