ஈரோடு
டி.என்.பாளையம் அருகே தொட்ட கோம்பையில் புதிய பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும்- வன கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
|கூட்டம்
டி.என்.பாளையம் அருகே தொட்ட கோம்பையில் புதிய பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும் என்று வன கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
டி.என்.பாளையம் ஒன்றியம் பெருமுகை ஊராட்சி தொட்ட கோம்பை வன கிராமத்தில் வன கிரம சபை கூட்டம் மாதேஸ்வரன் கோவில் வளாகத்தில் நடந்தது. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், பொறுப்பாளர்கள் அ.இ.பரமேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்கூடம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் தனிநபர் நில உரிமை சான்று இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே கிராம சபையின் மூலம் 83 பயனாளிகளுக்கு நில உரிமை சான்று வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை அது சம்பந்தமான நில உரிமை சான்று வழங்கப்படவில்லை. இதுகுறித்து முறையான அளவீடு செய்து சட்டப்படி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய நில உரிமை சான்று கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தொட்ட கோம்பையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளி மூடப்பட்டு விட்டது. இங்கு 1-ம் வகுப்பு 8-ம் வகுப்புவரை படித்த குழந்தைகள் 25-க்கும் மேற்பட்டவர்கள் 8 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வலையபாளையம் உயர்நிலை பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. வனத்தின் வழியே பயணம் செய்ய வேண்டியது உள்ளது. கிராமத்திலேயே தொடக்க கல்விக்கான வசதி இல்லாததால் இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொட்ட கோம்பையில் புதிதாக தொடக்கப்பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும். இதன்மூலம் பழங்குடியின மக்கள் எளிதில் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதி
* தொட்டகோம்பையில் குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையம் தொடங்கப்பட வேண்டும்.
* கள்ளிப்பட்டியில் இருந்து தொட்ட கோம்பை வரை பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். பஸ் மற்றும் கனரக வாகனங்கள் தொட்டகோம்பைக்கு வந்து செல்ல கரும்பாறை அணைக்கட்டு கால்வாய் மேல் உள்ள பாலம் இடையூறாக இருக்கிறது. எனவே இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.