தேனி
அய்யப்ப பக்தர்களுக்கான வேட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்
|The work of making vetis for Ayyappa devotees is intense
சபரிமலை சீசன்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யும் காட்டன் சேலைகள் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இங்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அணியும் வேட்டி, துண்டுகள் தயார் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) கார்த்திகை மாதம் பிறப்பதால் சபரிமலை சீசன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு சக்கம்பட்டியில் அய்யப்ப பக்தர்களுக்கான வேட்டிகள் மற்றும் துண்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நூல் விலை அதிகம்
அதில் நீலம், கருப்பு, காவி, பச்சை ஆகிய வண்ணங்களில் வேட்டிகள், துண்டுகள் தயாரிக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அம்மன் கோவில் திருவிழாவுக்கு தேவையான மஞ்சள் நிற சேலைகள், வேட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெசவாளர்களிடம் கேட்டபோது, இங்கு தயார் செய்யப்படும் வேட்டிகள், துண்டுகள் ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூலம் மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் அணியும் வேட்டிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளது. வேட்டி உற்பத்திக்கான நூல் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் தங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை என்றனர்.