பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் விளையாட்டு போட்டிகள்
|Individual sports competitions for school students
பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தற்காப்புக்கலை (டேக்வாண்டோ), பென்சிங் (வாள்சண்டை), ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் ஆகிய தனித்திறன் விளையாட்டுப்போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்திலும், நீச்சல் போட்டிகள் நீச்சல் குளத்திலும் நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 500 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். டேக்வாண்டோ போட்டியில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், லெப்பைகுடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றனர். ஸ்குவாஷ் போட்டியில் பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்றனர். நீச்சல் போட்டியில் களரம்பட்டி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளியும், எசனை மேல்நிலைப்பள்ளியும் வெற்றிபெற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஆலம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியும், கொத்தவாசல் நடுநிலைப்பள்ளியும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் வெற்றிபெற்றனர். ஸ்குவாஷ் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை லெப்பைகுடிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜம்மாள், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். போட்டிகளை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தி வைத்தனர்.