< Back
மாநில செய்திகள்
ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை
வேலூர்
மாநில செய்திகள்

ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை

தினத்தந்தி
|
15 Nov 2022 4:24 PM GMT

Strict action against rocking students

அடுக்கம்பாறை

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் கவுரிவெலிங்கட்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு வரவேற்பு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவ, மாணவிகளும், நர்சிங் கல்லூரியில் ஆண்டுக்கு 100 மாணவிகளும் படிக்கின்றனர்.

இந்த மருத்துவக்கல்லூரியில் 2022-23 ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்தது.

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கியது. முன்னதாக மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை முதல்வர் கவுரிவெலிங்கட்லா குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

புதிதாக வந்துள்ள மாணவர்கள் இயல்பாகவும், கவனத்துடனும் உங்கள் மருத்துவ படிப்பை தொடர வேண்டும். மாணவர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை எங்களிடம் தயங்காமல் கேட்க வேண்டும்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களை நாங்கள் நன்றாக படிக்க வைத்து, டாக்டர்களாக உருவாக்கி தருகிறோம். பிள்ளைகள் நலன் குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

அவர்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளும் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.

பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி நிலையை அந்தந்த துறை பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் அலுவலகத்திலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மருத்துவக்கல்வி மட்டுமல்லாது, விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்.

கல்லூரியை தூய்மையாக வைத்துக்கொள்ள மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

மாணவர்களாகிய நீங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், இந்த சமூகத்திற்கும் நேர்மையாக இருக்க வேண்டும். மூத்த மாணவர்களோடு சகோதர மனப்பான்மையோடு பழக வேண்டும்.

இந்த கல்லூரியில் ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

மேலும் முதல் நாளான இன்று வகுப்புகள் தொடங்கி பாடங்கள் நடத்தப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்