< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் உச்சியில் கம்பி வலைகள் பொருத்தம்; கலங்கரை விளக்கங்கள் துறை நடவடிக்கை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் உச்சியில் கம்பி வலைகள் பொருத்தம்; கலங்கரை விளக்கங்கள் துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
15 Nov 2022 5:57 PM IST

மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் எட்டி பார்க்கும்போது தவறி விழுவதை தடுக்கும் வகையில் கம்பி வலைகள் பொருத்தி கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்க்கொண்டது.

கலங்கரை விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறை மீது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ம் ஆண்டு கட்டப்பட்டது. வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இப்பகுதியை அறிந்து விலகிச் செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கலங்கரை விளக்கத்தில் தொடக்கத்தில் மண்எண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது.

ஆபத்தை உணராமல்...

கடந்த 1940-ல் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் சுற்றுலா வரும் பயணிகளின் குழந்தைகளும், கல்வி சுற்றுலா வரும் மாணவ, மாணவிகளும் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி அழகை ரசிக்கும்போது, தடுப்பு சுவர் இல்லாமல் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளுக்குள் ஆபத்தை உணராமல் தலையை நீட்டி ஆர்வ மிகுதியில் எட்டி பார்க்கின்றனர்.

கம்பி வலைகள் பொருத்தம்

இதனால் ஏதேனும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் கலங்கை விளக்ககங்கள் துறை நிர்வாகத்தினர் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பார்வையாளர்கள் மடத்தை சுற்றி 3 அடி உயரத்திற்கு பாதுகாப்பு கம்பி வலைகள் பொருத்தி உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுடன் வரும் சிறுவர்கள், இனி கம்பி வலைகள் வழியாகத்தான் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் இருந்து மாமல்லபுரம் நகரின் அழகை கண்டுகளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்