கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி படுகொலை - நம்பாததால் வீடியோ காலில் மனைவிக்கு காண்பித்த காதலன்...!
|கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது35). இவர் வேடசந்தூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி விஜயசாந்தி (30). இவர்கள் 2 பேரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு பிரதாப் (6) என்ற மகனும், பிரியா (3) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு நவீன்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
கழுத்தை அறுத்து கொலை
இந்தநிலையில் நேற்று காலை கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நவீன்குமார் பிணமாக கிடந்தார்.
இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நவீன்குமாரை அவரது மனைவி விஜயசாந்தி தனது கள்ளக்காதலனான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற சிவா (31) என்பவரை வைத்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
கள்ளக்காதல்
நவீன்குமாருக்கும், விஜயசாந்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து குடும்ப பிரச்சினைக்கு குறி கேட்க முடிவெடுத்த விஜயசாந்திக்கு சிவா குறி சொல்லி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் குறி கேட்க சென்றபோது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் உண்டானது. சிவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த விவகாரம் நவீன்குமாருக்கு தெரியவரவே அவர் விஜயசாந்தியை கண்டித்துள்ளார். இதையடுத்து விஜயசாந்தி சிவாவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதற்கு சிவாவும் சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி சம்பவத்தன்று நவீன்குமாரை மது குடிக்கலாம் என அழைத்துச் சென்று சிவா அவரை கழுத்தை அறுத்துக் கொன்றது தெரியவந்தது.
வீடியோ கால் செய்து காண்பித்தார்
நவீன்குமாரை கொலை செய்து விட்டதாக செல்போன் மூலம் சிவா, விஜயசாந்தியிடம் கூறி இருக்கிறார். ஆனால் விஜயசாந்தி நம்பவில்லை.
தனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தால் தான் நம்புவேன் என்று விஜயசாந்தி சிவாவிடம் கூறினார். இதனால் வீடியோ காலில், கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை காட்ட வேண்டும் என்று விஜயசாந்தி வற்புறுத்தி இருக்கிறார். இதனால் தனது செல்போனில் இருந்து சிவா, வீடியோ காலில் சென்று நவீன்குமார் இறந்து கிடந்த காட்சியை விஜயசாந்தியிடம் காண்பித்துள்ளார். அதன்பிறகே தனது கணவர் தீர்த்து கட்டப்பட்டார் என்பதை நம்பியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.