மயிலாடுதுறை
சிதம்பரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா
|கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் சிதம்பரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் கிராமம் சிவகாமி உடனாகிய சிதம்பரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் காலை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி,பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் தொடங்கி முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜைகளுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை நடந்த 4-வது கால யாக பூஜையில் பிம்பசுத்தி ரக்சாபந்தனம், கோபூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் மூலஸ்தான விமான குடமுழுக்கு மற்றும் பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர்,கிருஷ்ணர்,நவக்கிரக சன்னதி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவைகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.