< Back
சிறப்புக் கட்டுரைகள்
முதலீட்டு வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் இளைஞர்..!
சிறப்புக் கட்டுரைகள்

முதலீட்டு வழிமுறைகளை கற்றுக் கொடுக்கும் இளைஞர்..!

தினத்தந்தி
|
11 Dec 2022 9:52 PM IST

இளைஞர்களுக்கு முதலீடு சம்பந்தமான விழிப்புணர்வுகளையும், அதை சாத்தியப்படுத்தும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் இலவசமாக வழங்கி வருகிறார் இளமுருகின்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கமும், முதலீட்டு பழக்கமும் மிக குறைவாகவே இருக்கிறது. அதிகபட்சமாக, தங்களது வங்கிக்கணக்கில் மட்டுமே சில ஆயிரங்களை சேர்த்து வைக்கிறார்கள். ஆனால் சேமிப்பும், முதலீடும் அதுவல்ல என்கிறார், இளமுருகு. வந்தவாசியை சேர்ந்தவரான இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. படிப்பை முடித்தவுடன், பங்குச்சந்தை தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றியவர், இப்போது முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கிறார். அதோடு, இன்வெஸ்ட் சென்னை என்ற அமைப்பின் வாயிலாக, இளைஞர்களுக்கு முதலீடு சம்பந்தமான விழிப்புணர்வுகளையும், அதை சாத்தியப்படுத்தும் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் இலவசமாக வழங்கி வருகிறார். இயல்பான இளைஞர்களை, முதலீட்டாளர்களாக மாற்றுவதுதான் இளமுருகின் வேலை. அதுபற்றி நம்முடன் பேசுகிறார்.

இன்வெஸ்ட் சென்னை, திட்டத்தின் நோக்கம் என்ன?

எனக்கு தெரிந்த பங்குச்சந்தை தொடர்பான விஷயங்களை, எல்லோருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பதுதான், இன்வெஸ்ட் சென்னையின் நோக்கம். கடந்த 3 வருடங்களாக அதை நோக்கிதான் பயணித்து வருகிறோம். யூ-டியூப் வாயிலாக, பேஸ்புக் ரீல்ஸ் மூலமாக பங்குச்சந்தை தொடர்பான பல நுணுக்கங்களை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு முதலீடு சம்பந்தமான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறேன்.

இளைஞர்கள் எந்தெந்த வழிகளில் பணம் சேமிக்கலாம்? முதலீடு செய்யலாம்?

ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் பண்ட் இவை இரண்டும்தான், இளைஞர்கள் பணம் சேமிப்பதற்கான சிறந்த வழிகள். இவை இரண்டும்தான் பாதுகாப்பான மற்றும் சிறந்த லாபம் தரக் கூடிய முதலீட்டு திட்டங்கள். குறிப்பாக புதிதாக வேலைக்கு செல்பவர்கள், 5 அல்லது 10 வருடங்களுக்கு பின்பு சொந்த தொழில் தொடங்கும் யோசனை கொண்டவர்கள், இவ்விரு வழிகளிலும் பணத்தை முதலீடு செய்யலாம்.

இவை இரண்டில் எது அதிக லாபம் தரும்?

இதில் பங்குச்சந்தை தான் மிகச்சிறந்த லாபத்தை கொடுக்கும். குறுகிய காலத்தில் பணம் இரு மடங்காக உயரும் சாத்தியக்கூறுகள், பங்குச்சந்தையில் அதிகம். ஆனால் அதற்கு, பங்குச்சந்தை பற்றிய புரிதல் அவசியம்.

புதிதாக பங்குச்சந்தைக்குள் நுழைபவர்கள், எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்?

உலக சந்தையில் நடக்கும் சின்ன சின்ன விஷங்களும், பங்குச்சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் உலக நிகழ்வுகளையும், உள்ளூர் சட்டத்திட்டங்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம், கடன் வட்டி விகிதம்... போன்றவை கூட, பங்குச்சந்தையை தலைகீழாக புரட்டிப்போடும் ஆற்றல் கொண்டவை என்பதால், புதிதாக பங்குச்சந்தைக்குள் நுழைபவர்கள், அன்றாட நிகழ்வுகளை, விரல் நுனியில் வைத்திருப்பது, மிகவும் அவசியம்.

பங்குச்சந்தையில் இருக்கும் குறுகிய, நீண்ட கால டிரேடிங் முறைகளை பற்றி கூறுங்கள்?

பங்குச்சந்தையில், நீண்ட கால டிரேடிங்கும் உண்டு. குறுகிய கால டிரேடிங்கும் உண்டு. ஏன்...? இண்ட்ராடே எனப்படும் ஒருநாளில் செய்து முடிக்கக்கூடிய டிரேடிங் வகைகளும் உண்டு. உங்களுடைய நேரம் மற்றும் முதலீட்டு காலம் மற்றும் லாப நோக்கத்தை பொறுத்து இவை மாறுபடும்.

பாதுகாப்பான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

மக்களின் அன்றாட பயன்பாட்டில் அங்கம் வகிக்கும் பொருட்களான டி.வி., ஏ.சி., பிரிட்ஜ், மின்விசிறி, உணவுப்பொருட்கள், அதுசார்ந்த நிறுவனங்களும் பாதுகாப்பான பங்குகளின் பட்டியலில்தான் வரும். அதேசமயம், நிப்டி-50 பட்டியலில் வரும் நிறுவனங்களின் பங்குகளும் பாதுகாப்பானவையே.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் இவை இரண்டில் எது பாதுகாப்பானது?

இதில் மியூச்சுவல் பண்ட் வகைகள்தான், ரொம்பவும் பாதுகாப்பானவை. ஏனெனில் பங்குச்சந்தையில் நாம் சுயமாகவே முதலீடு செய்கிறோம். ஆனால் மியூச்சுவல் பண்ட் வகைகளில், முதலீடு செய்ய, முதலீட்டு நிறுவனங்களின் லாப-நஷ்ட கணக்குகளை ஆராய, கடந்த கால நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு இருக்கும். அதன் அடிப்படையில், பங்குச்சந்தையில் சுயநபர் முதலீட்டை விட, மியூச்சுவல் பண்ட் முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும்.

மியூச்சுவல் பண்ட் என்பது என்ன?

மியூச்சுவல் பண்ட் என்பது, தனிப்பட்ட வர்த்தகமோ, சந்தையோ கிடையாது. அது தொழில்முறை வல்லுநர்களால் கட்டமைக்கப்பட்ட முதலீட்டு கூடம். அதில் இருக்கும் வல்லுநர்கள், உங்களுடைய பணத்தை நேரடியாகவோ அல்லது பங்குச்சந்தை மூலமாகவோ, நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இவையின்றி, வேறு என்னென்ன வழிகளில் முதலீடு செய்யமுடியுமோ, அந்தெந்த வழிகளில் எல்லாம் முதலீடு செய்து, நீங்கள் முடிக்க நினைக்கும் காலத்திற்குள் லாபம் ஈட்ட நினைப்பார்கள். அதுதான் மியூச்சுவல் பண்ட்.

இந்தியாவில் இருக்கும் பிரபலமான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை பற்றி கூறுங்கள்?

அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி எனப்படும் ஏ.எம்.சி. நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் 44 இருக்கின்றன. இதில் ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆதித்யா பிர்லா மற்றும் எல் அண்ட் டி இப்படி நிறைய இருக்கிறது. இதில், தனியார் வங்கி நிறுவனமான ஹெச்.டி.எப்.சி. மிகப்பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை கட்டமைத்திருக்கிறது.

அதிகம் பாதிப்பில்லாத பண முதலீடு எதுவாக இருக்கும்?

டெப்ட் மியூச்சுவல் பண்ட் வகைகள்தான் சிறப்பானவை. பாண்ட் வகை மியூச்சுவல் பண்ட் இவை. இருப்பினும் பிக்ஸட் டெபாசிட் வகைகளை போல எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல், பணத்தை முதலீடு செய்து பத்திரமாக திரும்ப பெறலாம். இந்தவகை முதலீடுகள், 3, 5, 7 வருட காத்திருப்பிற்கு பிறகு நல்ல லாபத்தை கொடுக்கும். அதனால் நீண்ட கால முதலீட்டு யோசனையில் இருப்பவர்கள், இந்த டெப்ட் மியூச்சுவல் பண்ட் வகைகளை தேர்வு செய்யலாம்.

வல்லுநர் குழுவினால் நிகழ்த்தப்படும் மியூச்சுவல் பண்ட் வகைகளிலும் ரிஸ்க் இருக்கிறதா?

ஆம்..! இருக்கிறது. மியூச்சுவல் பண்ட் வகைகளுக்கு ஏற்ப ரிஸ்க் விகிதம் மாறுபடும். ஈக்யூட்டி எனப்படும் பங்கு வகை மியூச்சுவல் பண்ட்களில் ரிஸ்க் அதிகம். ஆனால் டெப்ட் வகை மியூச்சுவல் பண்ட்களில், ரிஸ்க் குறைவுதான்.

எப்போது முதலீடு செய்யலாம்?

எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மாத தொடக்கம், வருட தொடக்கம், பிளான் தொடக்கம் என எந்தவிதமான வரைமுறையும் இல்லை. எஸ்.ஐ.பி. அதாவது சிஸ்டமேட்டிக் இன்ஸ்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் இதை, எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

ஏ.எம்.சி. நிறுவனங்களின் முந்தைய 'டிராக்' ரெக்கார்டுகளை மதிப்பிட்டுதான், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த அறிக்கையில், அந்த நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள், செலவு விகிதம், வெளியேறும் காலத்தை குறிப்பிடும் எக்ஸிட் லோட், நிதி மேலாளரின் முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்துகொண்டு, அதில் சிறந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அதேபோல, உங்களுடைய காத்திருப்பு காலம், முதலீட்டு நோக்கம்... போன்றவற்றை முன்கூட்டியே அறிவித்து, அதற்கு ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

அதிக பாதிப்பு மற்றும் அதிக லாபம் தரக்கூடிய பங்குகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. இதில் லாபமும் அதிகம். அதேசமயம் பணம் இழக்கக்கூடிய பாதிப்புகளும் அதிகம். பொதுவாக பங்குச்சந்தையில், அன்லிஸ்டட் ஸ்டாக் என்பார்கள். இது பங்குச்சந்தைக்குள் வர தயாராக இருக்கும் நிறுவனங்களின் பங்குகள். இவை சந்தைக்குள் நுழையும்போது, நிச்சயம் பெரும் தாக்கம் இருக்கும். உள்நுழையும் பண மதிப்பில் இரு மடங்கு உயரும் சாத்தியமும் இருக்கிறது. அதேபோல, நிலைமை தலைகீழாக மாறி, பணம் பாதியாக குறையும் அபாயமும் இருக்கிறது. அதனால், இதை மிக கவனமாக கையாள்வது அவசியம்.

மிகவும் பாதுகாப்பான மியூச்சுவல் பண்ட் வகை எது?

இ.எப்.டி மற்றும் இன்டெக்ஸ் மியூச்சுவல் பண்ட் வகைகளின் லாபமும் குறைவு. அதேசமயம் ஆபத்தும் குறைவு. 50 வயதை கடந்த பிறகு ரிஸ்க் இன்றி முதலீடு செய்ய ஆசைப்படுபவர்கள், இந்த வகை மியூச்சுவல் பண்ட்களை தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் செய்திகள்