தென் தமிழகத்தின் வீர விலங்கு யாளி
|ஒரு சிறுவனிடம் “தம்பி.. டிராகன் தெரியுமா?” என்று கேட்டால், “ஓ! நல்லா தெரியுமே.. அது ரொம்ப பவர்புல். பெரிசா இருக்கும், பாம்பு மாதிரி நெளியும், பறந்துகிட்டே நெருப்பைக் கக்கும். அதை ஈஸியா ஜெயிக்க முடியாது” என்று பதில் கொடுக்கிறான். சீனர்கள் புனிதமாகக் கருதும் டிராகன்கள் பற்றி நமது தமிழ் நாட்டுச் சிறுவனுக்கு தெரிந்திருக்கிறது.
'பீனிக்ஸ் பறவை தெரியுமா?' என்று ஒரு கவிஞரையோ, இலக்கியவாதியையோ கேட்டால், அதுகுறித்து ரொம்பவே சிலாகித்து கூறுவார்கள். "இறப்பே இல்லாத பறவை அது. 500 ஆண்டுகள் வரை உயிர் வாழும். சூரியனின் அருகில் பறக்கும். வயதாகி விட்டால் சூரியனை வேண்டி தன்னைத் தானே எரித்துக்கொள்ளும். எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் புதிய பறவை உயிர்த்தெழும். இது கற்பனையாக இருந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றுக்கு உதாரணமான பறவை" என்று மூச்சு விடாமல் சொல்வார்கள்.
ஆனால் தென்னிந்தியாவின் கோவில்களில் இடம் பிடித்திருக்கும் யாளிகளைப் பற்றி, எத்தனை பேருக்குத் தெரியும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. நாம் அன்றாடம் வழிபடும் அனைத்து கோவில்களிலும் தூண்கள் முதல் கோபுரங்கள் வரை இந்த பிரமாண்ட விலங்கின் உருவத்தை செதுக்கியுள்ளார்கள். தஞ்சை பெரிய கோவில் உள்பட பல கோவில்களில் யாளி வரிசை என்று அவற்றை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்துள்ளனர். பல கோவில்களில் பிரமாண்டமாக நிற்கும் யாளியின் காலடியில் யானை வீழ்ந்து கிடப்பதாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் இந்த யாளிகளுக்கு கடிவாளம் இட்டு அடக்கி, அதன் மீது வீரர்கள் சவாரி செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் 'யானை, குதிரைகளைப் போல யாளிகளை போருக்கு பயன்படுத்தினார்களா?' என்ற கேள்வி எழுகிறது. யாளிகள் பெரும்பாலும் சிங்கம் போன்ற உடல் மற்றும் முகத்துடன், முகத்தில் யானையின் துதிக்கை போன்ற உறுப்பையும் பெற்றிருக்கும். பெரும்பாலும் சிங்க உடல், யானை முகம் போல துதிக்கை காணப்பட்டாலும், யாளியின் முகங்கள் மட்டும் வேறுவேறு விலங்குகளாக மாறுபாடு அடைகின்றன.
சிங்க முகம் கொண்டது 'சிம்ம யாளி' எனவும், மான் மற்றும் முதலையைப் போன்ற முகம் கொண்டது 'மகர யாளி' எனவும், யானை முகம் கொண்டது 'யானை யாளி' எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக அனைத்திலும் பாம்பின் வால் தோற்றமே காணப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலில், டைனோசர் மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமான டைனோசர்கள் வாழ்ந்ததாக அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவற்றின் படிமங்கள், முட்டைகள் கிடைக்கத் தொடங்கிய போதுதான், அவை வாழ்ந்த வரலாறை ஒத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். டைனோசர்கள் பற்றி வெளியான திரைப்படங்கள் அவற்றை உலகறியச் செய்து விட்டன.
அதுபோல யாளிகள் உண்மையிலேயே இந்த உலகத்தில் வாழ்ந்த தொன்மையான உயிரினமாக இருக்கலாம் என்பது குறித்து இதுவரை ஏன் யாரும் ஆய்வு செய்ய முன்வரவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கண்ணிலேயே பார்க்காத ஒரு உரு வத்தை தென் தமிழக கோவில்களில் லட்சக்கணக்கில் செதுக்கியிருப்பார்களா? அவை வெறும் கற்பனை உருவங்களா? அவை யானைகளை விட பலம் பொருந்தியவை என்றால் அவற்றை மனிதர்கள் அடக்கி ஆள்வதாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டது எதற்காக? என்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும், வேறு சில முருகன் கோவில்களிலும் உற்சவ மூர்த்திகள் யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் உலா வருவதைப் பார்க்கலாம்.
தஞ்சை பெரியகோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில்களில், 2 கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமாண யாளியின் சிலையையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். உலகத்தில் எந்த ஒரு மிருகத்துக்கும் இவ்வளவு எண் ணிக்கையில் முப்பரிமாண சிலைகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழந்தமிழ் புலவர்களும், சித்தர்களும் 'ஆளி' எனப்படும் யாளியைப் பற்றி எழுதியுள்ளனர். அதன்படி 'இடும்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி' என்று புலவர் நக்கண்ணையார் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 'வாள் போன்ற வரிகளை உடலில் உடைய புலி, தான் அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கம் விழுந்தால் அதை ஒருபோதும் சீண்டாது. அப்படிப்பட்ட புலியே பயந்து நடுங்கும் அளவுக்கு யாளியானது பாய்ந்து வந்து, உயர்ந்த நெற்றியையுடைய யானையின் முகத்தில் தாக்கி அதன் வெண்மை நிறமான தந்தத்தையே பெயர்த்தெடுக்கும் ஆற்றல் உடையது' என்பது இதன் பொருள். சித்தர்களும் முனிவர்களும் கூட, தங்கள் பாடல்களில் யாளியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். 'நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில் யாளியென விஞ்சுவார் போகத்தில்' என்று அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நம்மை வியக்க வைக்கும் பல விஷயங்களை கொண்ட, நம் பாரம்பரியத்தின் சுவடாக இன்றளவும் கோவில்களில் காட்சியளிக்கும் யாளிகளை, நாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து செல்கிறோம். ஆனால் சீனர்களின் டிராகன்களையும், எகிப்தியர்கள் குறிப்பிடும் பீனிக்ஸ் பறவைகளையும் வியந்து பேசுகிறோம்.
புராணங்களும் புனைக்கதைகளும் கலந்து பல விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளை தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். நமக்குள் இருக்கும் தீமைகளை அழித்து புத்துணர்வு பெறும் நாளாகவே இந்த நாள் பார்க்கப்படுகிறது. அதுபோல நமது வீரத்தை வெளிக்காட்டும் விதமாகவும், நம்பிக்கையூட்டும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள யாளிகளை, நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம். சில நூறு ஆண்டுகள் கடந்து டைனோசரின் படிமங்கள் போல, யாளிகளின் படிமங்களைக் கண்டெடுக்கும் நிலை ஏற்படலாம். எனவே தென்னிந்தியாவின் டிராகன்களான யாளிகளைக் கொண்டாடுவோம். தென் தமிழகத்தின் வீர விலங்காக கருதப்படும் அவற்றின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலமும், அவை குறித்து சாகசத் திரைப்படங்கள் தயாரிப்பதன் மூலமும் யாளிகளை உயிர்ப்பிக்க முடியும்.