மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை
|அருணாசல பிரதேச மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதியில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது அந்த மாநிலத்தின் முக்கியமான சுரங்கப்பாதை திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
மலை பிரதேசத்தில் சுமார் 13 ஆயிரம் அடிக்கு மேல் ரூ.687.12 கோடி செலவில் கட்டமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லை சாலை அமைப்பு (பி.ஆர்.ஓ) மேற்கொண்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை 3 கி.மீ. தூரம் நீளம் கொண்டது. அசாம்-அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இடையே மழை, பனி காலங்களில் போக்குவரத்து தடைபடாமல் இயங்குவதற்கு இந்த சுரங்கப்பாதை முக்கிய அங்கம் வகிக்கும்.
அசாம் மாநிலத்தின் பலிபரா - அருணாச்சல பிரதேசத்தின் தவாங் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. சேலா சுரங்கப்பாதை எனப்படும் இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையே பயண தொலைவு சுமார் ஒரு மணி நேரம் வரை குறையும். இரு மாநிலங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த சுரங்கப்பாதை வழியாக சீனாவின் எல்லையோர பகுதியாக விளங்கும் தவாங்கிற்கு ராணுவ படைகளை விரைவாக அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்திலும், மழை காலங்களிலும் தடைபடாமல் துரித கதியில் இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் எடுத்திருப்பதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா காலகட்டத்தின்போது இமயமலையில் சுரங்கப்பாதை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை பி.ஆர்.ஓ. அமைப்பு நான்கு சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது. தற்போது எட்டு சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 12 சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது.