< Back
சிறப்புக் கட்டுரைகள்
பெண்களை அதிகமாக பாதிக்கும் காற்று மாசுபாடு
சிறப்புக் கட்டுரைகள்

பெண்களை அதிகமாக பாதிக்கும் காற்று மாசுபாடு

தினத்தந்தி
|
19 March 2023 2:20 PM IST

சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

இந்தக் குழு, 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார்.

''காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் செய்திகள்