< Back
சிறப்புக் கட்டுரைகள்
கோடை காலத்தில் தினமும் ஏன் மோர் பருக வேண்டும்?
சிறப்புக் கட்டுரைகள்

கோடை காலத்தில் தினமும் ஏன் மோர் பருக வேண்டும்?

தினத்தந்தி
|
23 March 2023 8:41 PM IST

தினசரி மோர் உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மோர் பருகுவது நல்லது.

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்ப நிலை பதிவாகி அதிரவைத்துவிட்டது. வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது.

மற்ற மாதங்களை விட கோடை காலங்களில் மோர் பருகுவது உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்க உதவும். அதில் உள்ள பொட்டாசியம் உடலில் திரவ சமநிலையை மேம்படுத்தும். பாலை விட மோரில் கொழுப்பும், கலோரிகளும் குறைவு. அதிக சத்தும் கொண்டது. உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. கோடை காலத்தில் தினமும் ஏன் மோர் பருக வேண்டும் என்பதற்கு மேலும் சில காரணங்கள் குறித்து பார்ப்போம்.

அசிடிட்டி பிரச்சினையை தவிர்க்கும்

எண்ணெய் தன்மை கொண்ட மற்றும் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வதன் காரணமாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை ஏற்படும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை இயல்பாக்கும். அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் மோர் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்.

பற்கள்-எலும்பு களுக்கு நன்மை பயக்கும்

மோரில் கால்சியம் நிறைவாக இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக எலும்புகளை வலிமையாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சிதைவு நோய்களை தடுக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மோர் உதவும். அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்யும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

தினசரி மோர் உட்கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் மோர் பருகுவது நல்லது.

நீரேற்றமாக வைத்திருக்கும்

மோர் சிறந்த நீரேற்ற பானமாகும். இது உடலில் நீர் சமநிலையை பராமரிக்க துணை புரியும். வியர்வை மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை ஈடு செய்யும். நீரிழப்பை தடுக்கும்.

உடலை குளிர்ச்சியாக்கும்

மோர் உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது. அதனை பருகுவதன் மூலம் உடல் விரைவாக குளிர்ச்சி அடையும். கோடை காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதில் மோருக்கு முக்கிய பங்கு உண்டு.

சருமத்திற்கு நலம் சேர்க்கும்

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு நலம் சேர்க்கும். சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதோடு, அதனை சுத்தப்படுத்தவும் வழிவகை செய்யும். சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு பிரகாசமாக ஜொலிக்கவும் வித்திடும். முகப்பரு புள்ளிகளை அகற்றவும் உதவும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதையும் தவிர்க்கச் செய்யும்.

மேலும் செய்திகள்