< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹேண்ட் பேக் பயன்படுத்துகிறீர்களா...? கவனியுங்கள்
சிறப்புக் கட்டுரைகள்

ஹேண்ட் பேக் பயன்படுத்துகிறீர்களா...? கவனியுங்கள்

தினத்தந்தி
|
26 Jun 2022 5:19 PM IST

பெண்கள் வெளியே செல்லும்போது தங்களுக்கு தேவையான பொருட் களையும் உடன் எடுத்து செல்வார்கள். அதற்கு ஹேண்ட்பேக் அவசியமானது. ஏற்கனவே எடுத்து செல்லும் பொருட்களின் எடை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஹேண்ட்பேக்கை வாங்கும்போதே அதன் எடையைக் கவனிக்க வேண்டும். இல்லையெனில் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

பெண்கள் 'ஷோல்டர் பேக்' வகைகளைத்தான் அதிகம் பயன்படுத்துவதுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களுக்குத் தேவையான குடை, வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், முக்கியமான பேப்பர்கள், மேக்கப் பொருட்களை ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் நான்கு கிலோ பொருள்களுடன் ஒரு பக்கமாக மட்டுமே மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால், பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

எலும்புகளில் பாதிப்பு ஏற்படும்

தோள்பட்டையில் உள்ள நரம்புகள் நசுங்கி, கையில் வலியை ஏற்படுத்தும். அந்தப் பகுதியின் தசைகளும் பாதிப்படையும். கழுத்தில் ஆரம்பித்து தோளில் முடியும் எலும்பை, 'ஆக்சிலரி போன்' என்றும் 'பியூட்டி போன்' என்றும் சொல்வார்கள். அந்த எலும்பையும் ஹேண்ட்பேக் அழுத்தி பிரச்சினையை உண்டாக்குகிறது.

பலரும் ஹேண்ட்பேக்கை வாங்குவதோடு சரி, அதனை பயன்படுத்திவிட்டு குப்பை தொட்டியில் தூக்கி வீசும் வரை அவற்றை துவைத்து சுத்தம் செய்வதே இல்லை. கழிவறை முதல் உணவகம் வரை தன்னுடனே எடுத்துச் செல்கிறார்கள். இப்படிப் போகும் இடமெல்லாம் கிருமிகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குள் படுக்கை அறை வரை கொண்டு வரப்படுகிறது, 'ஹேண்ட் பேக்'. அதனால் ஹேண்ட் பேக் விஷயத்தில் அதீத கவனம் அவசியமாகிறது.

ஹேண்ட்பேக் தேர்வு

அன்றாடம் பயன்படுத்தும் பேக் எனில், அது எடை குறைவானதாக இருக்கட்டும். அடிக்கடி துவைத்துச் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்கவேண்டும். தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக இருக்க வேண்டும். ஒரே பக்கமாகத் தூக்கிச்சென்று தோளில் ஏற்படும் வலியைத் தடுக்க... இரண்டுத் தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்தலாம். ஷோல்டர் பேக்கை பயன்படுத்தும்போது வலது கை, இடது கை என அடிக்கடி பையை மாற்றி அணியுங்கள். அனைத்துப் பொருள்களையும் ஹேண்ட்பேக்கில் அடைக்காமல், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கு லஞ்ச் பேக்கைப் பயன்படுத்துங்கள்.

ஹேண்ட்பேக்கில் பல அறைகள் இருந்தால், அதில் வைக்க வேண்டிய முக்கிய பொருட்களை பட்டியல் போடவும். வீட்டில் பயன்படுத்தும் பொருளை, அலுவலகம் கிளம்பும் முன்பு, வீட்டிலேயே எடுத்துவைத்து விடவும். இதனால் ஹேண்ட் பேக்கை தூக்கி செல்வதால் ஏற்படும் தேவையில்லாத வலியைத் தவிர்க்கலாம்.

ஷாப்பிங் மற்றும் சுற்றுலா செல்லும்போது பெண்கள் மட்டுமே மொத்த பொறுப்புகளையும் தனது ஹேண்ட்பேக்கில் நிறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கணவர் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனி பையைக் கொடுத்துவிடலாம். அதில், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்திவிடுவது நல்லது.

அடிக்கடி ஹேண்ட்பேக்கை சுத்தம்செய்து தேவையற்ற காகிதங்கள், பயன்பாடில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவும். சோப்புத் தூள் அல்லது கிளீனிங் லிக்விட் பயன்படுத்தி ஹேண்ட்பேக்கின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தம் செய்யவும்.

மொத்தத்தில் ஹேண்ட்பேக்கை லக்கேஜ் ஏற்றும் லாரியாக பயன்படுத்தாமல் மயிலிறகாக மென்மையாக கையாள வேண்டும்.

மேலும் செய்திகள்