ஏன் தூங்க வேண்டும்?
|நம் உடல் சோர்வின்றி இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாதது. தூக்கம் உடல் சோர்வை மட்டும் போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் தன்மை கொண்டது.
இரவில் சரியாக உறங்கவில்லையென்றால், அடுத்த நாள் காலையில் கண்களில் அதன் தாக்கம் எதிரொலிக்கும். கண் எரிச்சலால் அவதிப்பட நேரிடும். பொதுவாக தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் கண்கள் இயக்கத்தில் இருக்கும். அவற்றுக்கு ஓய்வு கொடுக்க, தூக்கம் அத்தியாவசியமானது.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும், திசுக்கள், செல்களை புத்துணர்வடையச் செய்யவும் தூக்கம்தான் உதவுகிறது. மற்றவர்களை ஒப்பிடும்போது, நன்றாக தூங்கும் பழக்கமுடையவர்களுக்கு நினைவாற்றல் திறன் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் போதுமான அளவுக்கு தூங்குபவரின் உடல் எடை சீராக இருக்கும். மனஅழுத்தமும் எட்டிப்பார்க்காது.
தூக்கம் வராவிட்டால்..
தூக்கம் வராமல் அவதிப் படுபவர்கள் வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் உடல் இயக்கம் சீராகி தூக்கம் கண்களை தழுவும். உடற்பயிற்சி செய்ய முடியாத பட்சத்தில் நடைப்பயிற்சி, தியானம் செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சிக்கல் என்ன?
சரியாகத் தூங்கவில்லையென்றால், இதய நோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்து வைத்தாலும், அதை அனுபவிக்க உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாக பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம். அதற்கு உதவுவதுதான் தூக்கம் என்பதை புரிந்து கொண்டு நன்றாக தூங்குவோம், நோயின்றி வாழ்வோம்!