யார் இந்த 'ரோஜர் பின்னி?'
|பி.சி.சி.ஐ. சேர்மன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரோஜர் பின்னி-யை இந்த காலத்து இளைஞர்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஏனெனில், அவர் 1980-ல் கொடிக்கட்டி பறந்த இந்திய ஆல்-ரவுண்டர். சிலருக்கு வேண்டுமானால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் பெயரோடு ஒத்துபோவதால், அவரது தந்தையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கலாம். உண்மையில், அவர்தான் ஸ்டூவர்ட்டின் தந்தை. இவருக்கு அதையும்தாண்டி பல அடையாளங்களும், கிரிக்கெட் உலகில் பல வரலாறுகளும் உண்டு. அதை தெரிந்து கொள்வோமா...?
* யார் இவர்
ரோஜர் பின்னி ஸ்காட்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர். இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய ஒரு ஆங்கிலோ இந்தியர்.
* கிரிக்கெட் வாழ்க்கை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்த பின்னி கர்நாடக ரஞ்சி அணிக்காக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் பின்னி அசத்த இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். 1979-ம் ஆண்டு இந்திய அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார். அதன் பின்பு இந்திய அணியின் முக்கியமான தருணங்களில் எல்லாம் பின்னியின் பெயரும், அவரது பங்களிப்பும் இருந்தது.
தொடக்க வீரர், மிடில் ஆர்டர் வீரர், அதிரடி வீரர், விக்கெட்டுகள் விழாமல் நிலைத்து நின்று ஆடும் வீரர் என்று பேட்டிங்கில் பல அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னி. பந்துவீச்சிலும் அசத்தினார். இன் சுவிங், அவுட் சுவிங்... என இரண்டு பக்கங்களிலும் பந்தை சுவிங் செய்வதில் வல்லவர் இவர்.
* பின்னி ஸ்பெஷல்
இவர் அதிவேக பந்துவீச்சை வெளிப்படுத்தும் வீரர் கிடையாது. ஆனால் மித வேகத்தால் எதிரணியை மிரட்டுபவர். இந்த வித்தை, 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலககோப்பையில் சிறப்பாக எடுப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியை, லீக் சுற்றிலேயே, இந்திய அணி வீழ்த்தியதற்கு பின்னியும் ஒரு முக்கிய காரணம். அந்த தொடரில், மிக சிறப்பாக செயல்பட்டு, பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். நிச்சயம் வென்றாக வேண்டிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அரை இறுதிக்கு இந்திய அணியை அழைத்து சென்றார். அந்தத் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரானார். கூடவே உலக கோப்பையையும் வென்று கொடுத்தார்.
* பயிற்சியாளர்
1987 உலககோப்பையுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் பின்னி. இருந்தும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக ஆஸ்திரேலியா சென்று பயிற்சியாளர் ஆவதற்கான படிப்பை முடித்தார். பிறகு 19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு, பயிற்சியாளராக மாறி, 2000-ம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2012-ல் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவரானார். கர்நாடக கிரிக்கெட்டின் நிர்வாகப் பொறுப்பில் பல முறை இருந்துள்ளார் பின்னி. தற்போது பி.சி.சி.ஐ. சேர்மன் பதவி அவரைத் தேடி வந்துள்ளது. யாரும் ஆட்சேபனை சொல்லாமல், போட்டியே இன்றித் தேர்வாகி உள்ளார் பின்னி.
ஸ்டூவர்ட் பின்னி
இந்திய அணியில், ஆல்ரவுண்டராக விளையாடிய ஸ்டூவர்ட் பின்னி, ரோஜர் பின்னியின் மகன். தந்தையின் வளர்ப்பில், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கலக்கினார். ஆனால், அது எல்லா காலமும் எடுபடவில்லை. வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 4 ரன்களை விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது கிரிக்கெட் உலகின் பெஸ்ட் பெர்பாமன்ஸ் ஆக இன்றும் திகழ்கிறது. அதை தவிர்த்து, ஸ்டூவர்ட்டின் பெஸ்ட் என்பதற்கு வேறு எதுவும் இல்லை. அதற்கு காலமும் இடம் கொடுக்கவில்லை.