இதுவரை நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் யார்...?நோபல் கடந்து வந்த பாதை
|மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி என ஆறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசு எப்படி வழங்கப்படுகிறது? நோபல் பரிசு கடந்து வந்த வரலாறு என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும். அக்டோபர் மாதம் நெருங்குகிறது என்றாலே போதும். செப்டம்பரிலேயே நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவர்களின் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிவிடும். மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என ஆறு பிரிவுகளில் வழங்கப்படும். அதுவும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விருது என்றே இந்த அறிவிப்பு வெளியாகும்.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ப்ரடு நோபலின் பெயரில் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள் அனைத்தும் ஸ்வீடனில் வைத்து தான் வழங்கப்படும் என்றாலும், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வைத்து கொடுக்கப்படுவது வழக்கம்.
பொறியியல் குடும்பத்தில் 1864ல் பிறந்து விஞ்ஞானியாக வலம் வந்த இந்த ஆல்ப்ரடு நோபலின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அழிவுக்குரியதாக இருந்தன. இவருடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் டைனமைட் போன்ற ஆபத்தான வெடி பொருட்கள் தான். இதனாலேயே சிறந்த விஞ்ஞானியான இவரது புகழ் இகழ்ச்சியிலேயே முடிந்தது.
இதனால் வருந்திய ஆல்ப்ரடு நோபல், தனது சொத்து அனைத்தையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் நபர்களுக்கு பரிசாக வழங்க உயில் எழுதி வைத்துவிட்டு காலமானார். அவரது மரணத்திற்கு பிறகு 1901 ஆம் ஆண்டு முதல் அவரது பெயரிலேயே 5 பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தது.
1968ல் சுவீடன் மத்திய வங்கியும் தனது பங்கிற்கு ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து. பொருளாதாரம் என்ற புதிய பிரிவுக்கான விருதை அறிமுகம் செய்தது.
அந்த வகையில் நோபல் பரிசு பெறுபவர்களுக்கு 24 காரட் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட பதக்கம், ஏழரை கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சர்.சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர் , ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேர் இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர்.