< Back
சிறப்புக் கட்டுரைகள்
புறக்கணிக்கப்படும் புறநகர் ரெயில் நிலையங்கள் புனர்வாழ்வு பெறுவது எப்போது?
சென்னை
சிறப்புக் கட்டுரைகள்

புறக்கணிக்கப்படும் புறநகர் ரெயில் நிலையங்கள் புனர்வாழ்வு பெறுவது எப்போது?

தினத்தந்தி
|
28 Nov 2022 10:42 AM IST

புறக்கணிக்கப்படும் புறநகர் ரெயில் நிலையங்கள் எப்போது புனர்வாழ்வு பெறும் என்பது அப்பகுதி ரெயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மும்பை, சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் மக்களுடைய போக்குவரத்துக்கு தேவையை நிறைவு செய்வதில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. புறநகர் பகுதிகளில் இருந்து பல்வேறு வாழ்வாதார தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளுக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

அதில் ஒரு வழித்தடமான சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். எனவே இந்த பகுதிகளுக்கு இடைப்பட்ட ரெயில் நிலையங்களில் முறையான மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள், கேண்டீன், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இருக்கின்றன.

வாழும் வடக்கு, தேயும் தெற்கு

ஆனால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் உள்பட புறநகர் ரெயில் நிலையங்களில் இந்த அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது அப்பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று சொல்வது போல தாம்பரம் வரை உள்ள ரெயில் நிலையங்கள் ஜொலிப்பதாகவும், புறநகர் ரெயில் நிலையங்கள் களையிழந்து காணப்படுவதாகவும் பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

புனரமைக்க வேண்டும்

இதுதொடர்பாக புறநகர் பகுதியை சேர்ந்த பயணிகள் மனக்குமுறல்கள் வருமாறு:-

ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்:-

நான் பிராட்வே பகுதியில் சிறிய அளவில் துணிக்கடை நடத்தி வருகிறேன். தினமும் செங்கல்பட்டு-கடற்கரை ரெயிலில் பயணம் செய்து வருகிறேன். ஆனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.

2 முறை நான் செல்போனை பறிகொடுத்துள்ளேன். இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வந்தே பாரத் ரெயில்களில் உள்ளது போன்று மின்சார ரெயில்கள் உள்ளேயும், பெட்டியின் வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும்.

அடிப்படை வசதிகள் முறையாக இருக்கும் புறநகர் ரெயில் நிலையங்கள் புனரமைக்க வேண்டும்.

களையிழந்த ரெயில் நிலையங்கள்

அண்ணாநகரை சேர்ந்த மைக்கேல்:-

நான் இயற்கை மற்றும் யோகா மருத்துவம் படித்துவிட்டு செங்கல்பட்டில் உள்ள சர்வதேச இயற்கை மற்றும் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரெயிலில் பயணம் செய்கிறேன்.

தாம்பரம் வரை உள்ள ரெயில் நிலையங்கள் பளிச்சென்று இருக்கின்றன. ஆனால் அதன்பின்னர் வரும் ரெயில் நிலையங்கள் களையிழந்து இருக்கின்றன. தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இந்த ரெயில் நிலையங்கள் அடங்கி உள்ள தொகுதியை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

செங்கல்பட்டை சேர்ந்த கவியரசன்:-

நான் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிகிறேன். தினமும் மின்சார ரெயிலில் சென்று வருகிறேன். புறநகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் பெயரளவுக்கு தான் மேற்கூரைகள் உள்ளன. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதியுறும் நிலை உள்ளது. அதேபோன்று குடிநீர் குழாய்கள் காட்சி பொருட்களாகவும், நினைவுத்தூண் போன்றும் உள்ளது. கழிப்பிட வசதி முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கி புறநகர் ரெயில் நிலையங்களும் அடையாளம் பெறும் வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாங்களும் கட்டணம் செலுத்திதான் மின்சார ரெயிலில் பயணம் செய்கிறோம். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் ரெயில்வே நிர்வாகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துக்கொள்வது ஏனோ?

புதர் மண்டி...

மறைமலைநகரை சேர்ந்த சரவணன்:-

நான் கம்ப்யூட்டர் என்ஜினீயர். செங்கல்பட்டில் நான் பணியாற்றும் நிறுவனத்துக்கு தினமும் மின்சார ரெயிலில் தான் பயணித்து வருகிறேன். நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த புறநகர் ரெயில் நிலையங்கள் மட்டும் அப்படியே காட்சி அளிக்கின்றன. ரெயில் நிலையங்களில்தான் அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது மட்டுமின்றி ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் புதர் மண்டி கிடக்கின்றன. எனவே இரவு நேரங்களில் ரெயில் நிலையத்துக்கு அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.

அச்சம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பெண் பயணிகள் லட்சுமி, தீபிகா:-

கோடம்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலைபார்க்கிறோம். இதற்காக ரெட்டிப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம்-செங்கல்பட்டு மின்சார ரெயிலில் செங்கல்பட்டு வருவோம். இங்கிருந்து கடற்கரை செல்லும் மின்சார ரெயிலில் பயணிப்போம்.

ரெட்டிப்பாளையம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இல்லை. அதேபோன்று புறநகர் ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருக்கிறது. ரெயில்வே போலீசாரை காணவே முடிவதில்லை. எனவே இரவு நேரத்தில் அச்சத்துடன் பயணிக்கும் நிலை இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதி ஒதுக்கவேண்டும்

எழும்பூர் போன்ற ரெயில் நிலையங்களை புனரமைக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது போன்று புறநகர் ரெயில் நிலையங்களையும் புனரமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே புறநகர் பகுதியை சேர்ந்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

மேலும் செய்திகள்