'தமிழ்நாடு' உருவானது எப்படி?
|‘தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள ‘நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
அலைகள் இல்லாத கடலும், கவலைகள் இல்லாத மனிதனும், சர்ச்சைகள் இல்லாத அரசியலும் கிடையாது.
நாட்டில் அவரவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்.
பொங்கல் பண்டிகை வருகிறதே! மனைவி புதுத்துணி எடுக்க வேண்டும் என்று சொன்னாளே! யாரிடம் கடன் வாங்குவது என்று யோசிக்கும் குடும்பஸ்தன்...
இந்த மாதம் செலவு அதிகமாகிவிட்டதே! வீட்டுக்கடன் தவணையை எப்படி செலுத்தப்போகிறோம்? என்று கலங்கும் மாதச்சம்பளக்காரன்...
வாய்க்காலில் தண்ணீர் வரவில்லையே! வாடிக்கிடக்கும் பயிரை காப்பாற்ற என்ன செய்யலாம்? என்று தவிக்கும் விவசாயி...
- இப்படி ஆளாளுக்கு ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றை எப்படி சமாளிப்பது? என்று ஒவ்வொருவரும் கவலையில் இருக்கும் போது, இது போதாதென்று அரசியலில் அவ்வப்போது ஏதாவது புதுப்புது பிரச்சினைகள் பூதம் போல் கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.
அப்படி புதிதாக கிளம்பி இருக்கும் ஒரு பிரச்சினைதான் 'தமிழ்நாடு பெயர்' விவகாரம். தமிழ்நாட்டை 'தமிழகம்' என்றும் அழைத்து வருகிறோம்; எழுதியும் வருகிறோம். இது ஆண்டாண்டு காலமாக சாதாரணமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டை 'தமிழ்நாடு' என அழைப்பதை விட, தமிழகம் என அழைப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று மாநில கவர்னர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசியதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, அவரது கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்து உள்ளன.
சரி... என்னதான் நடந்தது?
உத்தரபிரதேச மாநிலம் காசியில் பிரமாண்டமாக நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த 4-ந் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், உடலில் கை, கால் என்று பல்வேறு அங்கங்கள் இருப்பது போல் மாநிலங்களெல்லாம் இந்த தேசத்தின் அங்கங்கள் என்றும், தமிழ்நாடும் பாரதத்தில் ஒரு இடம் என்றும், எனவே தமிழகம் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார்.அத்துடன், இந்தியா என்பது ஒரே நாடு என்றும், ஆனால் அதை பல மாகாணங்கள் நிறைந்த அமெரிக்க தேசம் போல் சிலர் பார்ப்பதாகவும், இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுப்பதாகவும் கூறினார்.
'தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள 'நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி, அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோடு, 'தமிழ்நாடு' என்ற பெயரே நீடிக்கும் என்றும் கூறினார்கள்.
இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
அதுசரி... இந்த 'தமிழ்நாடு' என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பின்னணி என்ன? என்பதைப்பற்றி பார்ப்போம்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மும்பை அல்லது டெல்லி, ஆக்ரா போன்ற வடமாநில நகரங்களுக்கு யார் சென்றாலும், "என்ன மதராஸியா?" என்று கேட்கும் வழக்கம் இப்போதும் உள்ளது. வட மாநில மக்களை பொறுத்தமட்டில் தென் மாநிலங்கள் என்றால் அவர்கள் நினைவுக்கு வருவது சென்னைதான். அதற்கு காரணம் இருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது தற்போதைய ஆந்திராவின் ஒரு பகுதி, கேரளாவின் ஒரு பகுதி, கர்நாடகத்தின் குடகு பகுதி ஆகியவை சென்னை மாகாணத்துடன்தான் இருந்தன. வட இந்தியர்களை பொறுத்தமட்டில் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களை 'மதராஸி' என்ற ஒரே பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். அவ்வளவுதான். இந்த வழக்கம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.
புதிதாக ஒரு வீடு கட்டி அங்கு குடிபுகும் போது பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு அறையையும் எப்படி பயன்படுத்துவது? எந்தெந்த பொருட்களை எங்கே வைப்பது? என்பதில் குழப்பங்கள் ஏற்படும். அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி செய்து முடிப்பது என்பது பெரும் சவாலான பணியாகும்.
ஒரு வீட்டுக்கே இப்படி என்றால் நாட்டுக்கு?...
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இப்படித்தான் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது. நாட்டின் முதல் துணைப்பிரதமரும், உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் பட்டேல், துண்டு துண்டாக பிரிந்து கிடந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களையெல்லாம் இந்தியாவுடன் சேர்த்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
இதற்கிடையே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. சென்னை மாகாணத்தில் தெலுங்குபேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை தனியாக பிரித்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கவேண்டும் என்று கோரி அங்கு பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. கலவரமும் வெடித்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, முதலில் பூகோள அடிப்படையில் மாநிலங்களை பிரிக்கலாம் என்று கருதினார். ஆனால் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால்தான் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை கருதி பின்னர் நேரு அதை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு, 'மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்' கீழ், மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தது. சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு 1953-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில் இருந்து குடகு பகுதியும், ஐதராபாத் மற்றும் பம்பாய் மாகாணங்களில் இருந்து கன்னட மக்கள் வசிக்கும் சில பகுதிகளும் பிரிக்கப்பட்டு 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. பின்னர் 1973-ல் மைசூர் மாநிலம் கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் திருவாங்கூர், கொச்சி, மலபார் சமஸ்தானங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு கேரளா ஆனது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளும் கேரளாவின் அங்கமாயின.
எஞ்சிய பகுதி சென்னை மாகாணம் ஆனது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க மார்ஷல் ஏ.நேசமணி, பி.தாணுலிங்க நாடார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆந்திரா பிரிவினையின் போது திருத்தணியை ஆந்திராவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் மாபெரும் போராட்டம் நடத்தி திருத்தணியை ஆந்திராவுடன் சேர்க்கவிடாமல் காப்பாற்றினார். அத்துடன், சென்னையை தங்களுக்கு வழங்க கோரி ஆந்திரர்கள் மதராஸ் மனதே என்ற கோஷத்துடன் போராடியபோதும், சென்னை நகரை விட்டுக்கொடுக்காமல் போராடி காப்பாற்றியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்.
இப்படியாக பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் மாநில பிரிவினைகள் ஓரளவு சுமுகமாக நடந்து முடிந்தன. ஒட்டுமொத்த தேசத்தின் நலன் கருதி அந்த காலத்தில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட்டதால் இது சாத்தியமானது.
மாநில பிரிவினைகளுக்கு பின், சென்னை மாகாணத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 1956-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர் மரணம் அடைந்தார்.
சங்கரலிங்கனாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற கோரிக்கை மேலும் வலுவடைந்தது. இதனால் மத்திய அரசு யோசிக்க தொடங்கியது. சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மசோதாவை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரான பூபேஷ் குப்தா எம்.பி. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். அந்த மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்தில் அப்போது எம்.பி.யாக இருந்த அறிஞர் அண்ணா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
விவாதத்தின் போது ஒரு உறுப்பினர், "தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் நீங்கள் எதை சாதிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அண்ணா, "பார்லிமெண்ட் என்பதை 'லோக்சபா' என்று பெயர் மாற்றியதன் மூலம் நீங்கள் எதை சாதித்தீர்கள்? 'கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ்' என்பதை 'ராஜ்ய சபா' என்று மாற்றியதன் மூலமும், 'பிரசிடெண்ட்' என்பதை 'ராஷ்டிரபதி' என்று மாற்றியதன் மூலமும் நீங்கள் எதை அடைந்தீர்கள்?" என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தனது வாதத்திறமையால் அந்த உறுப்பினரை திணறடித்தார். அத்துடன், "தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் உங்களுக்கு என்ன இழப்பு வந்துவிடப்போகிறது?" என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த உறுப்பினரால் பதில் சொல்ல முடியவில்லை. என்றாலும் அந்த மசோதா தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு 1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு விடிவுகாலம் ஏற்பட்டது.
1968-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி, சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முதல்-அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், "சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளை மறந்து தீர்மானத்துக்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.
விவாதத்துக்கு பதில் அளித்து அண்ணா பேசுகையில் கூறியதாவது:-
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் வாழ்வில் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்த தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. இதை இந்த சபையில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டிருந்த போது, தமிழ்நாடு என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பிவைத்தால் அதற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை ஏதுமில்லை என்று கூறினார்கள்.
10 நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மந்திரி சவான், இதுவரை 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே பேசியவர் மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் 'டமில்நாட்' (தமிழ்நாடு) என்று கூறினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
இந்த தீர்மானம் எதிர்ப்பு எதுவுமின்றி நிறைவேறினால், அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி; தமிழரின் வெற்றி; தமிழ் வரலாற்றின் வெற்றி; தமிழ்நாட்டுக்கு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ளவேண்டும்.
மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனிநாடு ஆகவில்லை. இந்திய பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும். நாம் இப்படி பெயர் மாற்றத்துக்கு பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப்பார்த்தால் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்".
இவ்வாறு அண்ணா பேசினார்.
அதன்பிறகு நடைபெற்ற ஓட்டெடுப்பில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதை சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும் உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதன்பிறகு அண்ணா எழுந்து, தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்று சிறப்புமிக்க இந்த நன்னாளில் 'தமிழ்நாடு வாழ்க' என்று நாம் வாழ்த்துவோம் என்று கூறி 'தமிழ்நாடு வாழ்க' என 3 முறை குரல் எழுப்பினார். அதை ஏற்று, எல்லா உறுப்பினர்களும் 'வாழ்க' என்று கூறினார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி நடந்த போது சபை முழுவதும் உணர்ச்சிமயமாக காணப்பட்டது. மறுநாள் தமிழக மேல்-சபையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.அதன்பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர் மாற்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சென்னை மாகாணம் என்பது அதிகாரபூர்வமாக தமிழ்நாடு என்று ஆனது.
இதுதான், சென்னை மாகாணம் தமிழ்நாடு ஆன கதை. இதில் யாருக்கும் எந்த உள்நோக்கமும் கிடையாது.
"நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனிநாடு ஆகவில்லை. இந்திய பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்" என்று சட்டசபையில் அறிஞர் அண்ணா வாக்குறுதி அளித்ததைப்போல் தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும்.
நாடு என்று பெயர் வைப்பதாலேயே ஒரு பகுதி தனி நாடு ஆகிவிடாது.
பழங்காலத்தில் ஊர்களுக்கும், பகுதிகளுக்கும் 'நாடு' என்று பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. தமிழகத்தில் வல்லநாடு, வருசநாடு, செட்டிநாடு, கோடநாடு என்று ஊர்கள் மற்றும் பகுதிகளின் பெயர்கள் உள்ளன. பெயர்களை வைத்து அவற்றை தனிநாடு என கருத முடியுமா என்ன?
எனவே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்... அதற்காக பாடுபடுவோம்.
தமிழ்நாட்டுக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனார்
விருதுநகர் அருகே உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி-வள்ளியம்மை தம்பதிக்கு 1895-ம் ஆண்டு மகனாக பிறந்தவர் சங்கரலிங்கனார். இவர், பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் படித்தவர். காங்கிரஸ் மீதுள்ள ஈடுபாட்டால் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட சங்கரலிங்கனாருக்கு மூதறிஞர் ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். மகாத்மா காந்தி நடத்திய தண்டி யாத்திரையிலும் பங்கேற்று உள்ளார்.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டும் என்று கோரி சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் தமிழரசு கழகம் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டமும், ஆந்திர தனி மாநில கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு நடத்திய உண்ணாவிரதத்துக்கு கிடைத்த வெற்றியும் சங்கரலிங்கனாருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.
இதைத்தொடர்ந்து, சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் அருகே சூலக்கரைமேடு என்ற இடத்தில் அவர் தனி ஆளாக 1956-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமை கட்சியினரின் அறிவுரைப்படி, பின்னர் உண்ணாவிரதத்தை விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்துக்கு மாற்றினார்.
அவரது கோரிக்கைளை அப்போதைய காங்கிரஸ் அரசு ஏற்காததால் உண்ணாவிரதம் நீடித்தது. இதன் காரணமாக நாளுக்கு நாள் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசம் அடைந்ததால் ம.பொ.சிவஞானம், காமராஜர், கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தம், அறிஞர் அண்ணா ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அண்ணா நேரில் சென்றும் பேசிப்பார்த்தார். ஆனால் பலன் இல்லை. சங்கரலிங்கனாரின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அக்டோபர் 10-ந் தேதி அவரை மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 13-ந் தேதி அவர் இறந்துவிட்டார். மதுரை தத்தனேரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சங்கரலிங்கனார் செய்த தியாகம் வீண்போகவில்லை. அவரது கனவு நனவாக 11 ஆண்டுகள் ஆனது. ஆனால் அதை பார்க்கத்தான் அந்த தியாகி இல்லை.
சங்கரலிங்கனாரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில், விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகே அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
ஆந்திரா பிரிவினையும்... கலவரமும்...
சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களை தனியாக பிரித்து சென்னையை தலைநகராக கொண்டு ஆந்திர மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி சுதந்திர போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் நேரு அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தார். உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கர்நூல், விஜயவாடா, குண்டூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு 1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் சென்னையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமானபேர் திரண்டு அண்ணா சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது வன்முறை வெடித்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
பொட்டி ஸ்ரீராமுலு மரணம் அடைந்த தகவல் பரவியதும் ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது. அனகபள்ளி என்ற இடத்தில் கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து, ஆந்திரா தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று டிசம்பர் 19-ந் தேதி பிரதமர் நேரு அறிவித்தார். அதன்படி, 1953-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து, தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்னூலை தலைநகராக கொண்டு புதிய ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு சென்னை தொடர்ந்து தலைநகராக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் ஐதராபாத் மாகாணம் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்னூலுக்கு பதிலாக ஐதராபாத் புதிய தலைநகரம் ஆனது.
(2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு ஐதராபாத்தை தலைநகராக கொண்டு தனியாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.)
ஒரு உறுப்பினர், "தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் நீங்கள் எதை சாதிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அண்ணா, "பார்லிமெண்ட் என்பதை 'லோக்சபா' என்று பெயர் மாற்றியதன் மூலம் நீங்கள் எதை சாதித்தீர்கள்? 'கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ்' என்பதை 'ராஜ்ய சபா' என்று மாற்றியதன் மூலமும், 'பிரசிடெண்ட்' என்பதை 'ராஷ்டிரபதி' என்று மாற்றியதன் மூலமும் நீங்கள் எதை அடைந்தீர்கள்?" என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தனது வாதத்திறமையால் அந்த உறுப்பினரை திணறடித்தார்.
தெலுங்கு 'தேசமும்'... எம்.ஜி.ஆரும்...
'நாடு' என்றாலும், 'தேசம்' என்றாலும் ஒன்றுதான். என்.டி.ராமராவ் கட்சியின் பெயரிலேயே 'தேசம்' உள்ளது. ஆந்திராவில், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆரை போலவே அரசியலில் குதித்து முதல்-மந்திரி ஆனவர். 1982-ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய இவர் அடுத்த ஆண்டில் ஆட்சியை பிடித்தார். இவர் எம்.ஜி.ஆரை தனது மூத்த சகோதரராகவும், அரசியல் வழிகாட்டியாகவும் கருதினார்.
கட்சி தொடங்குவது என்று முடிவு செய்ததும் சென்னை வந்த என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆரை சந்தித்து பேசினார். அப்போது எம்.ஜி.ஆர். "கட்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்க, 'தெலுங்கு ராஜ்ஜியம்' என்று பெயர் வைக்க இருப்பதாக என்.டி.ராமராவ் கூறினார். அதற்கு எம்.ஜி.ஆர்., "தெலுங்கு ராஜ்ஜியம் என்பதற்கு பதிலாக தெலுங்கு தேசம் என்று வைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே" என்று கூறியதாகவும், அதன்படியே தனது கட்சிக்கு தெலுங்கு தேசம் என்று என்.டி.ராமராவ் பெயர் வைத்ததாகவும் தகவல் உண்டு.
அப்படி பார்த்தால், தெலுங்கு தேசம் கட்சியிலேயே 'நாடு' உள்ளது.
'தமிழ்நாடு நாள்' விழாவும்... சர்ச்சையும்...
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை, மாநிலம் உதயமான நாளாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் 'ராஜ்யோத்சவா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பெரியதாக இருந்த சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு பரப்பளவில் குறைந்ததால் தமிழகத்தில் இந்த நாள் விழாவாக கொண்டாடப்படுவது இல்லை. ஆனால் சமீபத்திய சில ஆண்டுகளாக சில தமிழ் அமைப்புகள் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு உதய தினமாக கொண்டாடி வந்தன. இந்த நிலையில், தமிழ்நாடு உதயதினத்தை தமிழக அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
முன்பு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு இதை ஏற்றுக்கொண்டு, ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என்று 2012-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்காக தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு விழாவும் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2021-ல் புதிதாக பதவி ஏற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, அதற்காக அரசாணையை வெளியிட்டது.
நவம்பர் 1-ந் தேதியை ஜூலை 18-ந் தேதி என்று மாற்றியதற்கு அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
தேதி மாற்ற முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், ஒரு மாநிலம் அல்லது நாடு உருவான நாளைத்தான் உதயதினமாக கொண்டாடவேண்டும் என்றும், மாநிலத்துக்கு இந்த பெயரை சூட்டவேண்டும் என்று பரிந்துரைத்த நாளை கொண்டாடுவது சரியாக இருக்காது என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்கள். மேலும் தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம்தான் ஜூலை 18-ந் தேதி நிறைவேற்றப்பட்டதே தவிர, ஜனவரி 14-ந் தேதிதான் அது நடைமுறைக்கு வந்தது என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்தனர். அத்துடன் வழக்கம் போல் நவம்பர் 1-ந் தேதியைத்தான் தமிழ்நாடு விழாவாக கொண்டாடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இதனால் தமிழ்நாடு விழாவை எந்த தேதியில் கொண்டாடுவது என்பதில் மாறுபட்ட கருத்துகளும், சர்ச்சைகளும் இருந்து வருகின்றன.