நீரிழிவு நோயாளிகளுக்கு காலையில் சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம்?
|இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும்.
இரவு தூங்குவது முதல் காலையில் விழித்து எழுவது வரையிலான இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடாததால் நீண்ட நேரம் வயிறு காலியாக இருக்கும். அதன் காரணமாக காலையில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும். அதனை சீராக பராமரிப்பதற்கு குளுகோகன், எபிநெப்ரின் மற்றும் கார்டிசோல் ஆகிய மூன்று ஹார்மோன்கள் போராடும்.
இவற்றுள் கார்டிசோல், மன அழுத்த ஹார்மோனாகும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்கும் இந்த ஹார்மோன் அதிகாலை வேளையில் அதிகமாக சுரக்கும். பகல் பொழுதை நெருங்கும்போது படிப்படியாக குறையும். நள்ளிரவில் வெகுவாக குறைந்துவிடும். பின்பு காலையில் அதிகரித்துவிடும். எனவே நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மன அழுத்தத்தில் இருந்தால் இந்த ஹார்மோன் காலை வேளையில் சட்டென்று அதிகரித்துவிடும்.
குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகுதல், வேலையையும், குடும்ப வாழ்க்கையையும் சம நிலையில் நிர்ணயிக்க தவறுதல், கடன் நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்திற்கு வித்திடுகின்றன. அதே நிலை நீடிக்கும்போது ஒருவித பயம், வெறுமை போன்ற உணர்வுகள் வெளிப்படும்.
அப்படிப்பட்ட மன நிலையில் தூங்கச் சென்றால் காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக வெளியேறிவிடும். அதனால்தான் நோயாளிகள் கவலையுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.
ஏனெனில் காலை வேளையில் கார்டிசோல் அளவு அதிகரித்தால் இன்சுலின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குத்தான் நேரடி பாதிப்பை ஏற்டுத்தும். மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரிக்கும்போது கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சரியாக வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகக்கூடும். அவை தயாரிக்கும் இன்சுலினின் அளவு குறையலாம். அதன் தாக்கமாக உடலில் குளுக்கோஸ் அளவும் குறையக்கூடும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.
கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது, நீரிழிவு நோயாளிகளை மட்டுமல்ல மற்றவர்களையும் பாதிக்கலாம். அதிகாலை வேளையில் கார்டிசோல் ஹார்மோனின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் அழுத்தத்தின் தாக்கமாக உயர் ரத்த அழுத்தம், பதற்றம், மாரடைப்பு, மூளை பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோய்கள், உடல் வலி, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு நிலைமை மோசமாகக்கூடும்.
கட்டுப்படுத்துவதற்கான வழிகள்
* அதிகாலையில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.
* ஆன்டி-ஆக்சிடெண்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
* நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
* இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும்.
* மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பிற போதை பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
* தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும்.
* தினமும் போதுமான நேரம் ஓய்வு எடுப்பது அவசியமானது.
இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் நிர்ணயித்துக்கொள்வது, அது பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.