இளமையில் முதுமையா?
|35 வயதை கடப்பதற்குள் நிறைய பேர் இளமை பொலிவை இழந்து முதுமை தோற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வாழ்வின் இறுதிக்கட்டமான முதுமை பருவத்தை தவிர்க்கமுடியாது என்றாலும் இளம் வயதில் முதுமை எட்டிப்பார்ப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முன்கூட்டியே இளமையை இழப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றுள் மன அழுத்தம், தூக்கமின்மை, நீரிழப்பு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவை முக்கியமானவை. சரும பராமரிப்பில் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் முன்கூட்டிய முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* தினமும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க மறக்காதீர்கள். வெளியே சென்றால்தான் சூரிய ஒளிக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. முன்கூட்டிய முதுமையை தள்ளிப்போட விரும்பினால் அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
* சன்ஸ்கிரீன் போலவே ரெட்டினோல் கிரீமை சருமத்திற்கு உபயோகப்படுத்துவதும் நல்லது. இரவில் ரெட்டினோல் கொண்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது முன்கூட்டியே கோடுகள், சுருக்கங்கள் வருவதை தவிர்க்க உதவும்.
* 30 வயதில் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் கருவளையங்கள், சுருக்கங்கள் தென்பட்டால் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவற்றை போக்க உதவும் சரும பராமரிப்பு பொருட்களை உபயோகிக்கலாம்.
* வயது அதிகரிக்கும்போது செல் புதுப்பித்தல் செயல்முறை குறைந்துவிடும். சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டவும், சரும செல்களை புதுப்பிக்கவும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.
* சருமத்தில் மெல்லிய சுருக்கங்கள், கோடுகள் தென்பட்டால் அவற்றை சரிசெய்வதற்கு ஹையலூரோனிக் அமிலம் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.
* தினமும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த லோஷன் அல்லது சீரம் பயன்படுத்தி வரலாம். அவை சருமத்திற்கு ஊட்டம் அளிப்பதற்கும், ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும் உதவும்.
* சருமத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இருந்தால் அதனை குறைப்பதற்கு ஈரப்பதமூட்டும் கிரீம் தடவலாம்.
* 30 வயதிற்கு மேல் வளர்சிதை மாற்றம் குறையும் என்பதால் உணவு பழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.