< Back
சிறப்புக் கட்டுரைகள்
எதில் இருக்கிறது மகிழ்ச்சி...?
சிறப்புக் கட்டுரைகள்

எதில் இருக்கிறது மகிழ்ச்சி...?

தினத்தந்தி
|
25 Oct 2022 2:49 PM GMT

எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும்போது, அவர் மூளையில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்ய தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும். எதிர்மறை எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத வேறு ஏதாவது நேர்மறை எண்ணங்களை மனதில் புகுத்துங்கள்.

நீங்கள் மென்மையான சிவப்பு கம்பளத்தில் நடந்தாலும், கால்களில் முட்செருப்பு அணிந்திருந்தால் உங்கள் பயணம் வேதனையும் வலியும் மிக்கதாக இருக்கும். இதுவே நீங்கள் எத்தகைய முட்புதரில் நடந்தாலும், உங்கள் கால்களில் உறுதியான, மிருதுவான நல்ல செருப்பு அணிந்திருந்தால், உங்கள் நடைப்பயணம் உறுத்தல் இல்லாத, வலி இல்லாத இனிமையான பயணமாக அமையும்.

அது போல் எந்த சூழலிலும் உங்களை நீங்கள் திடமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு எதிர்மறை நிகழ்வையும் கடக்கும்போதும் அதை பயமாக, உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மட்டும் மனதில் கொள்ளாமல், அதனை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்த்து, பிரச்சினைக்கான தீர்வையும் சேர்த்து யோசியுங்கள்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான தீர்வுகளை சிந்திக்காமல் குறைகளை உற்றுநோக்கிப் பாருங்கள். அப்போது எதெல்லாம் சரியாக இல்லை என்பதை அறியலாம். அந்த மாதிரியான விஷயங்களை தேடிப்பிடிப்பது மட்டுமல்லாமல், அதை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுவதற்காக மனம் பாதுகாப்பாக சேர்த்தும் வைத்துக் கொள்ளும். இவை எல்லாம் எதிர்மறை எண்ணங்களாகும்.

ஒருவர் தன் மனதில் இதுபோல் எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும்போது, அவர் மூளையில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்ய தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும்.

ஒரு நாளில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒருவர் மனதில் எழுகிறது. இதில் பெரும்பாலும் ஒரே மாதிரியான எண்ணங்களே திரும்பத் திரும்ப சுழன்று வரும். அந்த எண்ணங்களை கொஞ்சம் கவனத்தோடு கையாண்டு நேர்மறை எண்ணங்களை மட்டும் தனக்குள் இருத்திக் கொள்ளும்போது ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் வாழ்வை நிறைக்கும்.

உண்மையான மகிழ்ச்சி என்பது, நமக்கு என்ன கிடைக்கிறது என்பதில் இல்லை. கிடைத்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் பயத்திலும், பரபரப்பிலும், இயலாமையிலும் இறுகிப்போகாமல் நம் இயல்பை தொலைக்காமல் இருப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

மன இயல் பயிற்சி

எந்த ஒரு சூழலிலும் உங்களுக்குள் ஏதாவது சங்கடமான நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்கள் எழ ஆரம்பிக்கும் போதே "Pattern Interruption" எனும் மன இயல் முறைப்படி சட்டென்று மேலே அண்ணாந்து பார்த்து அந்த எதிர்மறை எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத வேறு ஏதாவது நேர்மறை எண்ணங்களை மனதில் புகுத்துங்கள். இந்த வகையில் எதிர்மறை எண்ண சுழற்சி தடைபட்டு நேர்மறையான எண்ணங்கள் மனதில் எழும்.

இந்த பயிற்சியின் மூலம் உங்களுக்குள் சுழற்சியாக எழும் எந்த மாதிரி எண்ணங் களையும், உங்கள் தேவைக்கேற்ப நினைக் கவும், நிறுத்தவும், திசை திருப்பவும் கூடிய வகையில் கட்டுப்பாடோடு ஒழுங்கு செய்யலாம்.

மேலும் செய்திகள்